Thula Kaveri Maahaathmyam – Part 7

2
2,046 views

Kaveri_2

From the mid of October month, the holy month of Thula (Aippasi in Tamil) starts and Thula Kaveri Snanam is an important religious occasion in this month. This article describes in detail about Thula Kaveri Maahaathmyam and will be beneficial for for those who plan to take dip in Holy Kaveri during Thula and equally too to those who can offer mAnasIka prayer to the river who can’t make it personally to the river during this month. This article is written by Sri U.Ve. sArasAragnar mahAmahOpAdhyAya perukkAraNai mAdabushi chakravarthyAchArya swAmi.


பாண்டவர்களைப் பார்த்து மேலும் நாரதர் பணிக்கிறார் – பல வகைகளில் காவேரி எல்லா நதிகளையும் க்ஷேத்திரங்களையும்விட உயர்ந்தது என்பதை காட்டினேன். மற்றொரு புனிதமான கதையைக் கூறுகிறேன். கேளுங்கள். காவேரியில் ஒருவன் ஸ்நானம் செய்தபோது அவனது உடலில் சம்பந்தப்பட்ட காவேரி ஜலம் மற்றொரு திர்யக்கின் மேல் பட்டு அது ஸ்வர்க்கத்தை அடைந்ததாம். இப்படியிருக்க காவேரியில் நிர்மலமான மனத்துடன் ஸ்நானம் செய்பவன் அளவற்ற பயனை அடைவான் என்பதை சொல்லவும் வேண்டுமா?

ஒரு பன்றி காவேரியின் தண்ணீர் திவலையை பெற்று சொர்க்க லோகத்தை அடைந்தது. அது தன் பாவமனைத்தையும் போக்கி கொண்டதாம். அவனவன் தன் அதிகாரத்துக்கு தக்கபடி இதில் ஸ்நானம் செய்தால் உன்னத பலனை அடைவான் என்பதில் சந்தேகம் இல்லை.

முன்பு பாஹ்லீக தேசத்தில் பஹுதான்யம் என்ற ஓர் அக்ரஹாரம் இருந்தது. அங்கே வேதகோஷம் ஒலித்தது. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்ற பிராம்மணர்கள் நிறைந்திருந்தார்கள். அந்த அக்ரஹாரத்தில் ச்ருதி ஸ்ம்ருதிகளில் தேர்ச்சிபெற்ற ப்ரஹ்மசர்மன் என்ற அந்தணன் வசித்து வந்தான். அவன் ஸர்வ கலைகளையும் கற்றவன். எல்லாத் தொழில்களிலும் தேர்ச்சி பெற்றவன். எப்போதும் உழைப்பவன். தன் இல்லத்தில் கட்டித் தங்கங்கள் பல பெற்றவன். அவனுக்கு சமமான பணக்காரனே இல்லை எனலாம். இப்படியிருந்தும் அவன் பணத்தை சம்பாதிப்பதிலேயே ஆவல் கொண்டவன். தன் உயிரையும் பேணாமல் பணத்துக்காக வேலை செய்பவன். மோரை விற்றுப்பணத்தைச் சேமிப்பவன். எவற்றை விற்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவோ அந்த பொருள்களை விற்றுப் பணத்தை சம்பாதிப்பவன்.

அவன் தன் வீட்டில் ஒரு நாள் கூட சாப்பிடமாட்டான். பிறனுடைய வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்னும் நியமத்தை உடையவன். தன் வீட்டிலுள்ள மனைவி மக்களை ‘அதிகம் செலவழிந்துவிடும்’ என்று எண்ணி, வயிறு நிறையச் சாப்பிடாதபடி தடுத்துவிடுவான். புண்யாகவாசனம், ஆயுஷ்ய ஹோமம், ச்ராத்தம் முதலிய பூர்வ அபர கர்மங்களை செய்து வைப்பதில் அவன் திறமையுடையவன். காலையில் எழுந்திருந்து பவித்திரம், கூர்ச்சம், ஸமித்து, தர்ப்பம் முதலியற்றை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிடுவான். தன் கிராமத்தில் ஒரு விசேஷமும் இல்லாவிட்டால் வெளியூருக்கு போய்விடுவான். எப்படியாவது, எங்கேயாவது சென்று ச்ராத்தம் முதலியவற்றை செய்துவைத்து அங்கேயே சாப்பிட்டு வீடு திரும்புவான். தன் வயிறு வெளியில் நிரம்புவதனால் தன் இல்லத்தில் பருப்பு, காய்கறிகள் முதலியவற்றைச் சேர்த்துச் செய்ய வேண்டாம் என்று தடுத்துவிடுவான்.

பணத்திலேயே கண்ணோட்டம் உடையவனானபடியால் மனைவி மக்களைப் பற்றி அவன் ஏன் கவலைப்படப் போகிறான்? சரிவர ஸ்நானம், சந்தி முதலியவற்றைச் செய்ய மாட்டான். எங்கு ச்ராத்தம், எங்கிருந்து ஹோமப் புகை உண்டாகிறது, எங்கெங்கே பணம் கொடுப்பார்கள், எங்கு விவாகம் நடக்கிறது என்று சுற்றிக் கொண்டே இருப்பான். எங்கும் ஒரு விசேஷமும் இல்லாவிட்டால் வீட்டுக்குள் திண்ணையில் பட்டினியாகவே படுத்திருப்பான்.

இப்படிப்பட்ட இவனுக்கும் ஏதோ ஓர் அதிர்ஷ்ட விசேஷத்தால், குணத்திலும் ரூபத்திலும் சீலத்திலும் உயர்ந்த மனைவி கிடைத்தாள். அவள் கணவனுக்கு பணிவிடை செய்வதில் ஊற்றமுள்ளவள்; அவன் சொற்படி கேட்பவள்; அவன் மிரட்டுவான், அடிப்பான் என்று பயந்து வேலைகளை செய்பவள். அவனுக்காக பணத்தை சேமிப்பவள். வெகுகாலமாக அவன் விருப்பப்படியே நடந்துவந்தாள். ‘இப்படிப் பணத்தை சேமிக்கும் இவர் கடைசியில் பணத்தை எடுத்துக் கொண்டா போகப்போகிறார் ! இவருக்கு நல்ல உபதேசம் செய்ய வேண்டும்’ என்று எண்ணி அவள் ஒரு நாள் சொன்னாள்.


ஸ்வாமி, நமது உடல் நீர்க்குமிழிபோல் சீக்கிரத்தில் அழியக்கூடியது. இன்றோ நாளையோ நூறாவது வயதிலோ யமன் நம் உயிரை எடுத்துக் கொண்டு போவான். அக்கிரமங்கள் செய்து பணத்தை சேமித்து, ‘வெகு காலம் உயிருடன் வாழந்திருப்பேன்’ என்று எண்ணி, மாளிகைகளைக் கட்டுகிறான் ஒருவன். அவன் அதில் குடிபோகு முன்போ, குடி போய் இரண்டோர் ஆண்டுகளிலேயோ தன்அருமை உயிரை இழந்துவிடுகிறான். இவ்வளவு பணம் சம்பாதித்து என்ன பயனைப் பெற்றான்? அநுபவிக்க மாளாத பாவச் செயல்களை மாத்திரம் குவித்தான். உடல் திடமாக இருக்கும்போது அவரவர் தங்கள் தங்கள் வர்ணாச்ரம தர்மங்களை விடாமல் செய்ய வேண்டும். காலையில் எழுந்திருந்து புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸந்த்யாவந்தனம் முதலியவற்றை விடாமல் நடத்த வேண்டும். வரும் பாகவதர்களை ஆராதிக்க வேண்டும். அதிதிகளுக்கு விருந்தளித்தால் செலவழிந்துவிடுமே என்று நினைக்கக் கூடாது.

நாம் முயற்சி செய்து பணத்தைச் சம்பாதித்து வைத்தால், நாம் உயிருடன் இருக்கும்போதே அரசர்கள் வரிமூலமாக எடுத்துக் கொள்கிறார்கள். இரவில் திருடர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பகலிலும் தெரிந்தோ தெரியாமலோ பந்துக்கள் பறித்துக் கொள்கிறார்கள். அப்படியும் மிகுந்த பணம் நாம் சாகும்போது உடன் வரப்போவதில்லை. இப்படிப் பட்ட பணத்தை சம்பாதிப்பதற்காக உங்களுடைய நித்திய சடங்குகளையும் விட்டு, வெளியில் ஏன் ஓடுகிறீர்கள்? விவாகம் முதலிய நற்காரியங்களோ, மற்ற காரியங்களோ நடந்தால் ஏழைகளுக்கு எட்ட விடாமல் முதல் பந்தியில் அமர்ந்து பணத்தை ஏன் வாங்குகிறீர்கள்? பிறர் வீட்டில் புசித்தலை விட்டுவிடுங்கள். நமக்கோ அளவற்ற பணம் இருக்கிறது. தினந்தோறும் ஆயிரம் பேருக்கு விருந்தளிக்கலாம்.

கணவனின் அபிமானத்தில் இல்லாத மனைவுயும், பிக்ஷை வாங்காமல் உண்ணும் ஸந்நியாஸியும், அந்தணர்களிடத்தில் ஆசையில்லாத அரசனும், அக்கினிகாரியம் செய்யாத பிராம்மணனும் அதோகதி அடைவார்கள். நீங்கள் தினந்தோறும் ஒளபாஸனம் செய்ய வேண்டும். பகவதாராதனத்தை செய்ய வேண்டும். பருப்பு, காய்கறி முதலியவற்றை நிறைய சமைக்க செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்து, அதிதிகளை ஆராதிக்க வேண்டும். நீங்களும் அமுது செய்ய வேண்டும். எவ்வளவோ ஆசையுடன் வளர்க்க வேண்டிய குழந்தைகளை அநாதரிக்கிறீர்கள். ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பது பழமொழி. நான் உயிருடன் இருந்தும் இறந்தவளே.

பிரம்மசாரி, க்ரஹஸ்தன், வானப்பிரஸ்தன், ஸந்நியாஸி என்ற நான்கு ஆச்ரமிகள் உண்டு. இவர்களுள் க்ருஹஸ்தன் சிறந்தவன். அவனுக்கு அநுகூலமாகவும், குணமுள்ளவளாகவும் மனைவி கிடைத்தால் அவளை அநாதரித்தும், வஸ்த்ரம் ஆபரணம் முதலியவற்றை வாங்கிக் கொடுக்காமலும் இருந்தால் அவன் வீட்டை விட்டு லக்ஷ்மி சீக்கிரத்தில் விலகி விடுவாள். நம் புதல்வர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரத்தையே செய்யவில்லையே. பிறந்த எட்டாவது வயதில் செய்ய வேண்டும் ஸம்ஸ்காரத்தை ஏன் செய்யவில்லை? பதினாறு வயது ஆகியும் உபநயனம் செய்யப் பெறாமல் இருக்கக் கூடாதல்லவா? உமது உள்ளத்தில் இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நான் பெண்ணாக இருந்து தங்களுக்கு உபதேசம் செய்கிறேன் என்று கோபிக்க வேண்டாம். இந்த வீடு வாசல் மனைவி புத்திரர்கள் பணம் முதலியவை உங்களுடன் வரப்போவதில்லை. தர்மம் ஒன்றே வரப்போகிறது. ஒருவன் தன் இல்லத்தை விட்டு வேறு கிராமத்துக்குச் செல்லும்போது பாதேயத்தை (ப்ரஸாத மூட்டையை) எடுத்துக் கொண்டு போவான். அது போல் இந்த உடலை விட்டு வேறுலகம் செல்லும்போது நமக்கு வழியில் பசியைத் தீர்க்கும் பாதேயம் நாம் செய்துள்ள தர்மம் ஒன்றே. துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தால், வேறு உலகம் செல்லும்போது அது தாகத்தைப் போக்கும். எல்லாப் பலன்களையும் வருஷிக்கக் கூடியது துலா காவேரி ஸ்நானம் ஒன்றே. பாரத வருஷத்தில் கர்மபூமி என்று சொல்லப்பெறும் இவ்விடத்தில் ஸகல பலனையும் கொடுப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் இதை ஸ்ருஷ்டித்தான்.

காவேரிக்கரையில் பிறப்பவர்களும் வளர்கிறவர்களும் எவ்வளவோ புண்ணியத்தைச் செய்தவர்கள். காவேரியின் குளிர்ந்த நீர்த்திவலைகளுடன் கூடிய காற்று மேலே பட்டமாத்திரத்தில் அது ஸர்வ பாபங்களையும் ஒழிக்கும்.

‘இவன் நமக்கு வேண்டியவன், அவன் வேண்டாதவன்’ என்று எண்ணாமல், கல்வி கற்றுக் குடும்பியாக உள்ளவனுக்குப் பணம், மனை, அன்னம் முதலியவற்றை அளிக்க வேண்டும். எவன் தன் இல்லத்தின் முன் வந்து ‘கொடு’ என்று கேட்கிறானோ, அவனுக்கு ‘இல்லை’ என்று சொல்லக் கூடாது, ‘இல்லை’ என்று சொன்னால் தேவதைகள் இதைக் கேட்டு அவனுக்குப் பணம் முதலியவற்றின் இல்லாமையை உண்டுபண்ணுவார்கள். மேலும் மேலும் துக்கங்கள் உண்டாகும். கண் காது கை கால் முதலியவை நன்றாக இருக்கும்போதே தர்மங்களைச் செய்ய வேண்டும். தர்மங்களைச் செய்வதற்கன்றோ இறைவன் நமக்கு உடலை அளித்திருக்கிறான்? இருளைப் போக்கி ஒளியைக் கொடுப்பதற்காக ஏற்பட்டிருக்கும் தீபத்தில் பூச்சிகள் விழுந்து இறப்பது போல், நற்காரியங்களைச் செய்து புண்ணியங்களைப் பெறுவதற்காக ஈச்வரன் கொடுத்து உடலை வேறு வகையில் ஈடுபடுத்தி, அக்கிரமத்தைச் செய்து ஏன் துன்பங்களை அடைய வேண்டும்?

பிரம்மசர்மனின் மனைவியான சுகீலை இப்படி உபதேசம் செய்தாள். கணவன் திருந்தினான்.

மனைவியின் உபதேசத்தைக் கேட்ட பிரம்மசர்மா, புன்னகை செய்துகொண்டு, ‘உன்னால் எல்லாவற்றையும் அறிந்தேன். அறிவில்லாமையால் இத்தனை நாள் வீண் பொழுது போக்கினேன். இனி அறத்தையே செய்ய விரும்புகிறேன். உன்னால் எனக்கு நரகம் ஏற்படாது. இதுவரையில் நான் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்ததில்லை. ஒளபாஸனம் முதலியவற்றைக் கொண்டு நான் அக்கினியை அர்ச்சித்ததில்லை. பில்வதளங்களைக் கொண்டு பரமசிவனையும் ஹரியையும் பூஜிக்கவில்லை. துலா காவேரி ஸ்நானத்தைச் செய்யவில்லை,. அந்தணர்களுக்கு அன்னமிடவில்லை. எம்பெருமானின் கதையைக் கேட்டதில்லை, என் வயிறு முதலியவை நிரம்புவதையே முக்கியமாகக் கருதினேன். இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை உரைப்பாயாக” என்றான்.

சுசீலை சொன்னாள் – காலையில் எழுந்து ஸ்நானம் ஜபம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். பஞ்ச மஹாயஜ்ஞங்களை நடத்த வேண்டும். கிணறு குளம் முலியவற்றை ஏற்படத்துங்கள். அரசமரத்தை ஓரிடத்தில் வைத்து அதற்கு தீர்த்தத்தை சேர்த்து வளரச் செய்ய வேண்டும். பிரதக்ஷிண ப்ரணாமங்களைச் செய்யுங்கள். இதைச் செய்பவன் புத்திரர்களையும் பணத்தையும் நிரம்பப் பெறுவான். ஏழு முறை பிரதக்ஷிணம் செய்பவன் பூமியை பிரதக்ஷிணம் செய்பவன் போல் ஆவான். மகாவிஷ்ணு பிரம்மா பரமசிவன் என்னும் த்ரிமூர்த்திக்கு ஸமமாக உள்ளது அச்வத்த மரம். தூப தீபங்களையும், சந்தனம், மாலை, ஜலம், பழம் முதலியவற்றையும் கொண்டு இந்த மரத்தை பூஜிக்க வேண்டும். நடுப்பகலிலும் அபராஹ்நத்திலும் ஸாயங்காலத்திலும் நடு இரவிலும், செவ்வாய் வெள்ளி தினங்களிலும் இந்த மரத்தை பூஜிக்கக்கூடாது.

மற்ற தினங்களில் காலையில் இந்த மரத்தை பூஜித்து புருஷஸூக்தம், பித்ருஸூக்தம் முதலியவற்றைக் கொண்டு இந்த மரத்துக்குத் தண்ணீர் விடவேண்டும். அப்படிச் செய்பவன் கயா ச்ராத்த பலனை அடைவான். பித்ருக்களின் கடன்களிலிருந்து விடுபடுவான். காலையில் இந்த மரத்தைக் கட்டிக் கொள்பவன் வியாதி மரணம் முதலிய துர்க்கதிகளிலிருந்து விலகுவான். ஞாயிறன்று இந்த மரத்துக்கு நீர் வார்ப்பவன் கண் நோயைப் பெற மாட்டான். திங்களன்று அபிஷேகம் செய்பவனுக்கு கிரக தோஷம் ஏற்படாது. வியாழக்கிழமை அபிஷேகம் செய்பவன் அழகிய பெண்ணைப் பெறுவான். ஆக நீங்களும் ஸத்காரியங்களை செய்து அச்வத்த வ்ருக்ஷத்தை ஏற்படுத்தி காவேரியில் ஸ்நானம் செய்து அந்த தீர்த்தத்தைக் கொண்டு அந்த மரத்துக்கு அபிஷேகம் செய்யுங்கள் என்றாள்.

இதைக் கேட்ட ப்ரஹ்மசர்மா புலன்களை வென்று, நற்காரியங்களில் ஈடுபட்டு, அச்வத்த மரத்துக்கு பூஜை செய்து வந்தான். சுசீலை தன் கணவன் திருந்தி நல்வழியில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். அவன் மனம் கோணாமல் பணிவிடை செய்தாள். எப்போதும் அவன் செய்யும் ஸத்காரியங்களுக்குத் தடங்கல் ஏற்படாமல் நடந்து வந்தாள். அவன் கோபமுற்றால் சிரித்துக் கோபத்தை ஆற்றுவாள். மிரட்டினால் பயப்படுவாள். அவன் ஸந்தோஷத்துடன் இருக்கும்போது ஸமீபத்தில் செல்வாள். அவன் புஜித்தபின்தான் புஜிப்பாள். அவன் தூங்கின பிறகுதான் படுத்துக் கொள்வாள். அவன் எழுந்திருப்பதற்கு முன் எழுந்திருந்து வீட்டு வேலைகளைச் செய்வாள். தேவாலயங்களை அலங்கரிப்பாள். இறைவன் கதைகளைக் காது கொடுத்துக் கேட்பாள்.

கணவனின் ஆயுள் வளர வேண்டும் என்று எண்ணி அவள் துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்வாள். கணவனுக்கு வேண்டிய பொருள்களைக் கொணர்ந்து சமைத்துப் போடுவாள். அவன் படுத்தபிறகு கால்களை பிடிப்பாள். தான் மூன்று தினங்கள் விலகியிருக்கும்போது பசியுடன் இருந்த போதிலும் சாப்பிடமாட்டாள்; அலங்காரம் செய்துகொள்ள மாட்டாள்; பேசவும் மாட்டாள். நான்காவது தினத்தில் மஞ்சளுடன் ஸ்நானம் செய்து பரிசுத்தியுடன் இருப்பாள். அவள் கணவனையே தெய்வமாக நினைத்தாள். சமையல் செய்யும் போது ‘தேவதைக்காகவும், வைச்வதேவத்துக்காகவும்’ என்று சொல்லியே சமைக்க ஆரம்பிப்பாள். கணவனின் அநுமதியைப் பெற்று ஏழை மக்களுக்கு நிறைய கொடுத்தாள்.

இப்படி இருந்த சமயத்தில் யமதூதர்கள் ப்ரஹ்மசர்மாவை அழைத்துக் கொண்டு செல்ல அவனது இல்லம் வந்தனர். அவனது இல்லத்துக்குள் ஒருவராலும் நுழைய முடியவில்லை. ஏன்? சுசீலையின் பாதிவ்ரத்ய நெருப்பு நான்கு பக்கங்களிலும் வீச ஆரம்பித்தது. பதிவ்ரதா ஸ்திரீகளின் பெருமையை அளவிட முடியாதன்றோ? அங்கு வந்த யமது தூதர்கள் நெருப்பினால் கொளுத்தப்பட்டவர்களாய் ஓடிவிட்டனர். தம் அரசனான யமனிடம் முறையிட்டனர்.

யமன் ஆலோசித்து சித்திரகுப்தனை அனுப்பினான். சித்திரகுப்தன் ப்ரஹ்மசர்மாவின் இல்லத்தை அடைந்து ஒரு சுவரின் அருகில் அடைந்து ஒரு சுவரின் அருகில் மறைந்திருந்தான். அப்பொழுது ப்ரஹ்ம சர்மா மனைவியைப் பார்த்து, “சுசீலை, இன்றிரவு பால் பழம் பக்ஷ்யம் முதலியற்றை சம்பாதித்து வை. நாம் ஆவலுடன் இவற்றைப் புசிக்க வேண்டாம்” என்றான். இதைக் கேட்ட சித்திரகுப்தன் திடீரென்று சிரித்தான்.

சுசீலை, ‘காரணமில்லாமல் எங்கிருந்து சிரிப்பு உண்டாகிறது?” என்று ஆலோசித்து நின்றான். ‘நான் தேவ பூஜை செய்தது வாஸ்தவமானால், என் கற்பு உண்மையானால், உள்ளும் புறமும் நான் நல்ல நடத்தையோடு இருந்திருந்தால் இப்போது உண்டான மந்தகாசம் எங்கிருந்து வெளிவந்தது என்பது தெரிய வேண்டும். உள்ளும் புறமும் கடவுள் பரவியிருக்கிறான் என்கிறது வேதம். பெண்களுக்கு கணவனே கடவுள் என்கின்றன சாஸ்திரங்கள். இவை உண்மையானால் இந்த சிரிப்பின் காரணம் எனக்கு தெரிய வேண்டும். நான் அதிதி பூஜை செய்ததும், காவேரியில் ஸ்நானம் செய்ததும் உண்மையானால் சிரிப்பின் காரணம் புலப்பட வேண்டும். ‘நாராயணனே உயர்ந்த ப்ரஹ்மம்; அவனே உயர்ந்த தத்துவம்; உயர்ந்த ஜோதியும் அவனே’ என்று சொல்லும் வேதம் பிரமாணமானால் இந்த சிரிப்பின் காரணம் தெரிய வேண்டும்” என்ற சபதமிட்டாள்.

இதைக் கேட்ட சித்திர குப்தன் அழகிய உருவத்துடனனும் பளபளப்புடனும் எதிரில் தோன்றினான். சுசீலை தனது நன்னடத்தையின் பிரபாவத்தினால் அவன் சித்ரகுப்தன் என்பதையும், அவன் வந்த காரணத்தையும் அறிந்துகொண்டாள். உடனே அவனை வணங்கினாள். வணங்கியவளை, “தீர்க்க ஸுமங்கலீ பவ” என்று ஆசீர்வதித்தான் சித்திரகுப்தன். பிறகு அவள் அர்க்கியம் பாத்தியம் பழம் முதலியவற்றைக் கொண்டு சித்திரகுப்தனை உபசரித்தாள். “நீங்கள் வந்த காரணம் யாது?” என்று வினவினாள்.

சித்திரகுப்தன், “உன் கணவனுடைய ஆயுள் முடிந்துவிட்டது. அவனது உயிரை எடுத்துக் கொண்டு போக வந்தேன்” என்றான். இதைக் கேட்ட சுசீலை, “என் கணவனது ஆயுள் எப்படி முடியும்? நான் உங்களை வணங்கிய போது நீண்ட காலம் ஸெளமங்கல்யத்தை ஆசீர்வதித்தீர்களே?” என்றாள். சித்திரகுப்தன் திடுக்கிட்டான். “ஐயோ!” ஏமாந்துவிட்டேன். இனி என்ன செய்வது. சுசீலையே? நீ சொல்வது வாஸ்தவம். எணங்கும் சிறியவர்களைப் பெரியவர்கள் ஆசீர்வதிக்க வேண்டும். அப்படி ஆசீர்வதிக்காவிட்டால் இவரது ஆயுள் வணங்குபவனை அடைந்துவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. விவாகமாகாத பெண் வணங்கும்போது அவளைப் பார்த்து, ‘அழகிய பர்த்தாவை அடை’ என்று ஆசீர்வதிக்க வேண்டும். விவாகமான பெண் வணங்கினால், ‘தீர்க்க ஸுமங்கலீ பவ’ என்று ஆசிர்வதிக்க வேண்டும். விதவை வணங்கினால், ‘ நல்ல விஜ்ஞானத்தைப் பெறுவாய்’ என்று சொல்ல வேண்டும். நீ என்னை வணங்கியபோது, உனக்கு அசியைக் கூறாவிட்டால் என் புண்ணியமும் ஆயுளும் போய்விடும் என்று எண்ணி உனக்கு மங்கலத்தை சொன்னேன். இனி உன் கணவனின் ஆயுள் நீண்டிருக்க வேண்டும். நீ காவேரியில் துலா மாதத்தில் ஸ்நானம் செய்தபடியால் இந்த வாய்ப்பு உனக்கு கிட்டியது. ஆனால் என்னுடைய ஒரு கோரிக்கையை நீ நிறைவேற்ற வேண்டும்” என்றான்.

“என்ன கோரிக்கை?” என்று சுசீலா கேட்டாள்.

“நான் யமனுடைய கணக்கு வேலைகளை செய்பவன். அவருடைய அபிப்பிராயப்படி இங்கு வந்துள்ளேன். உன் கணவனை என் யஜமானனின் விருப்பப்படி அங்கே கொண்டு போய் மறுபடி இங்கு அழைத்து வருகிறேன். உன் கணவன் தீர்க்காயுசுடன் இருப்பான். இதுதான் என் கோரிக்கை” என்றான் சித்திரகுப்தன்.

சுசீலை, “சித்திரகுப்தரே, நீர் சொன்னபடி செய்யும். ஆயினும் எனக்கு ஒரு சந்தேகம்; அதை நீர் போக்க வேண்டும். என் கணவர் என்னுடன் பேசியபோது காரணமில்லாமல் நீர் ஏன் சிரித்தீர்?” என்றாள்.

சித்திரகுப்தன் புன்னகை செய்து, “நல்ல சுபாவமுடையவளே, ஆயுள் கடந்த உன் கணவனை அழைத்துப் போக இங்கு வந்திருக்கிறேன். இதை அறியாமல், தான் நிலையாக இருக்கப் போவதாக நினைத்துக் கொண்டு, இன்றிரவு பாலும் பழமும் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறானே என்று சிரித்தேன். ‘இவர்கள் புதல்வர்கள், இவள் மனைவி, இந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும், பணத்தை நிறைய சம்பாதிக்க வேண்டும். நான் இறந்துவிட்டால் இவர்கள் என்ன பாடு படுவார்களோ?’ என்று ‘ஜனங்கள் நினைக்கிறார்கள். வாசலில் பிச்சைக்காரன் வந்தால், ‘சாப்பாடு இல்லை, அப்புறம் போ’ என்று விரட்டுகிறார்கள். தங்களது ஆயுள் முடிந்துவிட்டது. யமன் வாசலில் காத்திருக்கிறான் என்பதை அறியாமல், விஷய சுகங்களில் ஆசை வைத்து, அன்னை அத்தன் புத்திரர் பூமி என்பவற்றில் மயங்கி ஜனங்கள் நடந்து கொள்கிறார்களே என்பதை நினைத்து சிரித்தேன்” என்றான்.

சுசீலையின் அநுமதியைப் பெற்று அவன் ப்ரஹ்மசர்மாவைத் தேவலோகத்துக்கு அழைத்துச் சென்றான். போகும் வழியில் இரண்டு கடன்காரர்கள் ப்ரஹ்மசர்மாவைத் தடுத்தார்கள். அவர்கள் பாதரக்ஷை வியாபாரம் செய்பவர்கள்.

“துஷ்டனே, எங்கே போகிறாய்? எங்கள் கடனைக் கொடு. முன்பு எங்களிடம், ‘பிறகு பணத்தைக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி, இரண்டு பாதரக்ஷை (மிதியடி) வாங்கினாய். பிறகு நாங்கள் கேட்டபோது சபிக்க ஆரம்பித்தாய். நாங்கள் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களானபடியால் பதில் ஒன்றும் கூற முடியாமல் இருந்துவிட்டோம். சித்திரகுப்தரே, ப்ரஹ்மசர்மா செய்தது சரியா? நீரே சொல்லும். பசுவையும் அந்தணனையும் பெண்ணையும் கொல்பவனுக்குப் பிராயச்சித்தம் செய்தால் பரிசுத்தி ஏற்படும். கடன்காரனுக்கு திருப்பி கொடுக்காதவரையில் எந்த பிராயச்சித்தத்தினாலும் பரிசுத்தி ஏற்படாது. இவன் எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தின் வட்டிக்காக இவனுக்கு புதல்வராக பிறந்து இவனுடைய பணத்தை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம். அசல் இன்னும் கொடுபடவில்லை” என்றனர்.

அப்பொழுது இரண்டு உயர்ந்த பிராம்மணர்கள் அங்கு வந்து வியாபாரிகளைப் பார்த்து, “ப்ரஹ்மசர்மா கொடுக்க வேண்டிய பணத்தை நாங்கள் கொடுக்கிறோம். அவனை விட்டு விடுங்கள்” என்றனர். வியாபாரிகள், “எமக்கு பணம் வேண்டியதில்லை. பாதரக்ஷையே வேண்டும்” என்றனர். பிராம்மணர்கள், “பாதரக்ஷை எப்படிக் கிடைக்கும்? எங்களது உடலிலிருந்து அதற்கு பதிலாகத் தோலைக் கொடுக்கிறோம்” என்று சொல்லிக் கத்தியால் அறுத்து கொடுத்தனர். இதைக் கண்டான் ப்ரஹ்மசர்மா. கடன் கேட்பதையும், அதற்கு மற்ற இருவர் கொடுப்பதையும் கண்டு, ‘இதென்ன?’ என்று வியப்படைந்தான். அவிவிருவரைப் பார்த்து, “நீங்கள் யார்? இங்கு வந்து எனக்கு உபகாரம் செய்வதற்கு காரணம் என்ன?” என்று கேட்டான்.

அந்தணர்கள், “நாங்கள் நீ வளர்த்த அரசமரங்கள். நீ தினந்தோறும் காவேரியில் ஸ்நானம் செய்து அந்த புனித நீரினால் எங்களுக்கு அபிஷேகம் செய்து, ஏழு முறை பிரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்தாய். இந்த நன்றியை மனத்தில் வைத்து, எங்கள் உடலிலிருந்து தோலை அறுத்து கொடுத்தோம். நீ யமலோகத்திலிருந்து திரும்பி வந்து எங்களை (மரங்களை)ப் பார். இது புலப்படும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.

சித்திரகுப்தன் பிரஹ்மசர்மாவை நோக்கி, “அச்வத்த மரங்களின் பிரபாவத்தைக் கண்டாயா? நற்காரியங்களை செய்பவனுக்கு ஒருகாலும் தீமைகள் அணுகா. நீ தர்மராஜரைப் பார்த்ததும் அவரைத் துதி செய். அவரைத் துதிக்க ஸ்தோத்திரங்களை உனக்கு உபதேசிக்கிறேன்” என்று சொல்லி உபதேசித்தான்.

பிறகு அந்தணன் சித்திரகுப்தன் மூலமாக யமலோகத்தை அடைந்தான். அங்கே ஸபையில் வீற்றிருந்த ஸூர்ய புத்திரனான யமனைக் கண்டான். ஸூர்யன் போல் விளங்குகிறவனும், கிரீடதாரியும், கடிஸூத்ரத்தை அணிந்தவனும், கேயூரம் முதலிய ஆபரணங்களை தரித்தவனும், சுட்டுரைத்த நற்பொன்னால் ஆன குண்டலங்களினால் விளங்குகிறவனும், அழகிய பீதாம்பரதாரியும், தயைக்கு இருப்பிடமும், வக்ஷஸ்தலத்தில் யஜ்ஞஸூத்ரத்தால் விளங்குகிறவனும், பரிவாரங்கள் சூழ இருப்பவனுமான யமதர்மராஜனைக் கண்டு வணங்கி துதிக்க ஆரம்பித்தான்.

“தர்மமே உருவெடுத்தாற் போல் தோற்றம் உடையவனே, சத்தியத்தை கைப்பிடித்தவனே, பாவம் செய்தவர்களை ஹிம்ஸிப்பவனே, ஸாதுக்களுக்குத் தகப்பன் போன்றவனே, அமுதம் போன்ற வார்த்தைகளைப் பேசுகிறவனே, நாம் ஒரு குற்றம் செய்தால் நமக்கு என்ன நேரிடுமோ என்று பயம் உடையவனே, உண்மையை அறிபவனே, ஸாதுக்களுக்கு ஸகல பொருள்களையும் அளிப்பவனே, வேத வேதாந்தங்களை அறிந்தவனே, அபயத்தைக் கொடுப்பவனே, ஸ்ரீமந்நாராயணனிடத்தில் பக்தி உள்ளவனே, செந்தாமரைக் கண்ணனே, ஸெளந்தர்யத்துக்கு இருப்பிடமானவனே, பாவிகள் விஷயத்தில் கோரப்பற்களையும், புருவ நெரிப்பையும் காட்டி அச்சத்தை விளைவிப்பவனே, உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்” என்று, சித்திரகுப்தன் தனக்கு உபதேசித்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ப்ரஹ்மசர்மா யமனை துதித்தான்.

இதைக் கேட்டதும் தர்மராஜன் சந்தோஷம் அடைந்து, ‘ஆயுஷ்மாந் பவ’ என்று ஆசீர்வதித்தான். தர்மராஜன் புன்னகையுடன் பேசினான்: “உனது துதியினால் மகிழ்ந்தேன். தீர்க்கமான ஆயுளைப் பெறுவாயாக. விரைவில் சென்று உன் மனைவி மக்களையும் பந்துக்களையும் பார்ப்பாயாக. நீ சொன்ன எனது ஸ்தோத்திரம் மிக உயர்ந்தது. எவனோருவன் இந்த ஸ்துதியை தினந்தோறும் காலையிலோ, ஒரு மண்டலமோ விடாமல் தன் பிறந்த நாளில் சொல்லி என்னை வாழ்த்துகிறானோ அவனுக்கு ஆரோக்யமான ஆயுள் உண்டாகும். முற்பிறவியில் நீ ஏழையும், நோயாளியுமான ஓர் அந்தணனை பூஜித்தாய். உனது இல்லத்தில் இடம் கொடுத்தாய். வியாதியை நீக்க நல்ல மருந்தை கொடுத்தாய். அந்த புண்ணியத்தினால் உனக்கு தீர்க்க ஆயுள் உண்டாகிறது. நீ இந்த பிறவியில் அந்தணனாக பிறந்தும் அக்கினிகாரியங்களையும் தர்மத்தையும் விட்டிருப்பதனால் ஆயுள் குறைந்துவிட்டது. உன் மனைவி துலா காவேரி ஸ்நானம் செய்ததனால் அது மறுபடியும் என் வழியாக நீண்டது. இனி நீ பூலோகம் அடைந்து நற்காரியங்களைச் செய்.

“கோயிலில் இறைவனுக்காக ஏற்பட்ட அரிசி நெய் எண்ணெய் முதலியவற்றை எம்பெருமானுக்கு அர்ப்பணம் செய்யும் அர்ச்சகன் நல்லுலகத்தை அடைவான். அப்படிச் செய்யாதவன் என் தண்டனைக்கு ஆளாவான். எம்பெருமானை ஆராதிக்கும்போது தூபதீபங்களை கொண்டே ஆராதிக்க வேண்டும். அப்படி செய்யாதவன் யமலோகத்தை அடைவான். இப்படி பல வகைகளில் பாவங்கள் நேரிடும். எல்லா பாவங்களையும் போக்க காவேரியில் துலா மாதத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். நீ சீக்கிரம் சென்று பந்துக்களுடன் வாழ்வாயாக” என்று சொல்லி யமன் அனுப்பிவிட்டான்.

ப்ரஹ்மசர்மா வீட்டுக்கு வந்தான். படுத்துக்கொண்டிருந்த இவன் திடீசென்று தன் கைகால்களை அசைக்க ஆரம்பித்தான். சுசீலை தன் கணவன் பிழைத்துவிட்டான் என்று எண்ணி, அவனைக் கட்டிக் கொண்டு, யமலோகத்தில் நடந்த செய்திகளைக் கேட்டு மகிந்தான்.

இப்படி ப்ரஹ்மசர்மா சுசீலையுடன் ஸந்தோஷத்துடன் வெகு காலம் வாழ்ந்தான். ஒரு நாள் சுசீலைக்கு உடல் நோய் ஏற்பட்டது. தன் உடலை விட்டு அவள் வெளிக்கிறம்பினாள். கணவனின் பணிவிடையால் அவள் உத்தம லோகத்தை அடைந்தாள்.

ப்ரஹ்மசர்மா சிறிது கஷ்டமடைந்து, ச்ரமமாக வாழ்க்கை நடத்தினான். ஒரு நாள் திருடர்கள் நுழைந்து அவனுடைய எல்லா பணத்தையும் அபகரித்து சென்றனர். அவன் வீட்டை விட்டு வெளியில் சென்றான். பசிதாகத்தால் பீடிக்கப்பட்டவனாய் மறுபடி அக்கிரமங்களையே செய்ய முயன்றான். மனைவியின் உபதேசம் பயனளிக்காமற் போயிற்று. தர்மராஜனின் தர்ம்யமான உபதேசமும் வீணாயிற்று. பழையமுதையும் எச்சிலையும் சாப்பிட ஆரம்பித்தான். இப்படி ஒவ்வொரு கிராமமாக திரிந்து, கடைசியில் ஒரு க்ருஹஸ்தன் பார்த்து அழைக்க, அவனது இல்லத்தை அடைந்தான். அங்கே தன் பாண்டியத்தை வெளிப்படுத்தினான். வீட்டுக்காரன் அவனை தன் இல்லத்திலேயே நிறுத்திக் கொண்டான்.

ஒரு சமயம் வீட்டுக்காரனுக்கு ஆசெளசம் ஏற்பட்டது. அப்போது இவனை பகவதாராதனத்தைச் செய்ய சொன்னான். இவன் காலைவேளையில் உணவு விடுதியில் ரகசியமாக சாப்பிட்டுவிட்டு பகவதாராதனம் செய்தான். இப்படி பல வகைகளில் அக்கிரமங்களை செய்த இவன் நோயை அடைந்து உயிரிழந்தான். பல காலம் நரகத்தில் வருந்தினான். கடைசியில் ஸ்ரீமுஷ்ண அடவியில் பன்றியாக பிறந்தான்.

அப்பொழுது விருத்தாசலத்தில் பத்மகர்ப்பன் என்ற அந்தணன் எப்போதும் பஞ்சாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டும், பஞ்ச யஜ்ஞங்களை செய்துகொண்டும், புலன்களை அடக்கிக் கொண்டும், ராமநாம ஸஹஸ்ரத்தை பாராயணம் செய்து கொண்டும் வசித்து வந்தான்.

ஒரு நாள் அவன் துலா மாதத்தில் அருணோதன காலத்தில் காவேரியில் ஸ்நானம் செய்ய அந்தணர்களுடன் சென்றான். அப்போது ஆகாயத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இடிகள் முழங்கின. இருள் சூழ்ந்து எல்லாருக்கும் பயத்தை அளித்தது. மழை பெய்ய ஆரம்பித்தது. அங்கு ஒரு தெருவில் முன்சொன்ன பன்றி, இவனை துரத்த ஆரம்பித்தது. உடன் வந்தவர்கள் ஓடிவிட்டனர். இவன் காவேரிக்கரையை ஓடி அடைந்தான். அப்போது காவேரிக் கரையில் ஒரு தாஸி ஸ்நானம் செய்து தலையை உதறினாள். அவளது கேசத்தில் பட்ட ஜலம் இந்த அந்தணனை துரத்தி வந்த பன்றியின் மேல் விழுந்தது. பன்றி காவேரி நீர்த்திவலை பட்ட மாத்திரத்திலேயே ஸர்வ பாவங்களிலிருந்தும் விடுபட்டு பன்றி உருவத்தை இழந்தது. மாலை சந்தனம் வஸ்திரம் ஆபரணம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டவனும், சிறந்த அப்ஸர ஸ்த்ரீகளால் சூழப்பெற்றவனுமான அழகான விமானத்தில் அமர்ந்து மேலே சென்றான். ஜனங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர். துரத்தப்பட்ட பத்மகர்ப்பனும் பயத்திலிருந்து விடுபட்டு, விமானத்திலுள்ள இவனை யார் என்று வினவினான். ப்ரஹ்மசர்மா தன் கதையைக் கூறினான்.

அந்தணர்கள், தாஸிகள் மற்றும் அனைவரும் காவேரியின் பெருமையைப் புகழ்ந்து பாடினர். தாஸியின் கேசத்தில் பட்ட காவேரிநீர் பன்றி உருவத்தை போக்கி ஸத்கதி அளித்த தென்றால் நேராக இதில் ஸ்நானம் செய்பவன் எவ்வளவு நற்கதியை அடைவான்?

இம்மாதிரி காவேரியின் பெருமையை நாரத மகரிஷி பஞ்சபாண்டவர்களுக்கு கூறினார் என்று அகஸ்தியர் ஹரிச்சந்திரனிடம் சொன்னார்.

To be continued…

Print Friendly, PDF & Email

2 COMMENTS

    • Part 3 is continuation of Part 2. The links provided for the two parts here were the same earlier which has now been corrected.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here