Thiruvirutham by Namazhwar

0
705

 

தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண்

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக்

கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய்

அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்தோ! வந்துலாகின்றதே.

பதவுரை

தளர்ந்தும்  முறிந்தும் வருதிரை

(கொந்தளித்து  விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும் காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்

(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்

அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்

(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்

பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்

கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்

திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்

அளாவியுண்ட
பசு சிறு தென்றல்

புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது

மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனது  திருத்துழாயிற்பட்ட தென்றல், நாயகி மகிழ்நதுரைக்கும் பாசுரம் இது. நாயகனது மேனியோடு ஸம்பந்தப்பட்ட பொருள் தன் உடம்பின்மீது வந்து பட்டுத் தனது பிரிவாற்றாமைத் துயரைச் சிறிது தணிப்பித்தலாகிய ஸந்தோஷத்தைத் தலைவி தோழிக்கு உரைக்கின்றாளென்க.

கொந்தளித்து வீசுகின்ற அலைக்கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் உறங்குவான் போல் போகு செய்தும் பிரளயகாலத்தில் உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும் கோவர்த்தநகிரியைக் குடையாகவெடுத்துப் பிடித்துப் பெருமழைத் துன்பத்தைப் போக்கியும் உபகரித்தருள்கின்ற எம்பெருமானுடைய திருமுடியில் அணிந்துள்ள திருத்துழாயை யளைந்த புதிய இளந்தென்றற் காற்றானது மகிழ்ச்சியுண்டாகும்படி என்மேல்வந்து வீசுகின்றது என்றாளாயிற்று.

இனி, இதனை, வழக்கம்போலத் தென்றல் வரவுகண்டு அதற்கு வருந்தத் தொடங்கிய நாயகியை நோக்கித் தோழி ‘இதை நீ வெறுந்தென்றலென்று கருதாதே; அவனுடம்பிற்பட்டு வருகிறது காண் இது; இது அவன் வரவுக்கு அறிகுறி’ என்று கூறிச் சோகந்தணிக்கிறதாகவுங்கொள்வர்.

ஹந்த! என்னும் வடசொல் (அவ்பயம்)- மகிழ்ச்சி, இரக்கம், துன்பம் முதலிய பொருள்களில் வருமென்று வடமொழி நிகண்டினால் தெரிகிறதனால் அதன் விகாரமாகிய அந்தோ வென்பது இங்கு மகிழ்ச்சிப் பொருளில் வந்ததென்க.

திருநெடுங்கண் வளர்ந்து மறிவுற்றும் = எம்பெருமானது தூக்கம் நமது தூக்கம் போல் தமோகுண காரியமாய் உடம்பு தெரியாது கொள்ளுந் தூக்கமன்றியே எல்லாப் பொருளையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணை சிந்தனை பண்ணும் தூக்கமாதலால் ‘கண்வளர்ந்தும் அறிவுற்றும்’ எனப்பட்டது; இது பற்றியே அத் தூக்கம்- யோக நித்திரை, அறிதுயில், விழிதுயில் துயிலாத் துயில், பொய்யுறக்கம் எனப்படும். “மால்வர¬யை மறிதர எடுத்தான்” என்றதனால் பசுக்கள் எட்டிப் புல்மேயலாம்படி கோவர்த்தந மலையைத் தலைகீழாக எடுத்துப் பிடித்தமையுந் தோன்றும்.சிறு தென்றல் – மந்தமாருதம்.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பிரிந்த நிலையில் ஆழ்வார் தாம் எம்பெருமானது காருண்யம் ஆச்வர்யம் யோக்யதை என்னும் இக்குணங்களின் நடையாட்டத்தைக் கண்டு ஆறியிருக்குந் தன்மையை அருளிச் செய்தலாம். மற்றவை வெளிப்படை. இனி தோழிவார்த்தை யென்னும் பக்ஷத்தில், அவன் ஆச்ரிதர்களை ரக்ஷித்தருளும் பொருட்டுக் கடலிலே யோகநித்திரை கொண்டருள்வதும் பிரளயாபத்தில் உலகத்தை வயிற்றில் வைத்து நோக்குவதும் கோவர்த்தநோத்தாரணம் பண்ணினமையுமாகிய மஹாகுணங்களைச் சொல்லி அன்பர்கள் ஆழ்வாரை ஆற்றுகின்றதாக ஸ்வாபதேசன் கொள்கை.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here