SriGoda’s Thiruppavai: கோதையின் திருப்பாவை!

2
2,401 views

வராஹ அவதாரத்தின்போது பூமியை உத்தாரணம் பண்ணிக் கொண்டு வருகிறான் பரமாத்மா. ‘உத்ரிதாமிவராஹேணா’ என்று உபநிஷத் கொண்டாடுகிறது. இவ்வாறு பூமியை உத்தாரணம் பண்ணிக்கொண்டு வரும்போது பூமாதா அழுகிறாள்.

யாராவது கிணற்றில் விழுந்து விட்டால் தூக்கிவிட்டவனைக் கொண்டாட வேண்டும். தன் பிராணன் பிழைத்தது என்று சந்தோஷப்பட வேண்டும். ஆனால், பூமாதாவோ அழுகிறாள். வராஹ மூர்த்தி, ”உன்னைத்தான் நான் காப்பாற்றி விட்டேனே? உன் சிரமத்தைத் தீர்த்து விட்டேனே? ஏன் அழுகிறாய்?” என்று கேட்கிறார்.

அதற்கு பூமாதா சொல்கிறாள்.

ஸ்ரீப்ருத்யுவாச –
அஹம் சிஷ்யாச தாஸீச
பார்யாச த்வயி மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம்
லகூபாயம் வத ப்ரபோ

”உன் சிஷ்யை, பார்யை நான். நான் கூக்குரலிட்டு அழைத்தபோது வந்து என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மாதிரி என் மேலே பல கோடி சராசரங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் அழைத்தால் நீ வருவாயா?” என்று பூமாதா கேட்கிறாள்; ‘ஸ¨கரமான மூர்த்தியே, நீ சொல்லு’ என்கிறாள். ஸ¨கரம் என்றால் பன்றி. ஸ¨கரம் என்றால் எளிதில் செய்யக் கூடிய என்றும் ஒரு அர்த்தம்.

‘உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்’ என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். ஆதியில் பூமாதா பகவானைப் பார்த்து எளிதில் செய்யக்கூடிய உபாயத்தைச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறாள். அப்போது பகவான் 3 விஷயங்கள் சொல்கிறார். பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். தஸ்மை ப்ரசுரார்ப்பணம் என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ப்ரபதன சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார்!

ஆத்ம சமர்ப்பணம் என்பதை முதுமையில் பண்ண வேண்டும் என்றில்லை. ‘கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்’ என்கிறார் நம்மாழ்வார் (திவ்ய ப்ரபந்தம் 2886, திருவாய்மொழி 2.10.1). நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்கும் போதே, புத்தி பிரகாசமாக இருக்கும்போதே, மனது சஞ்சலப்படாத நேரத்திலேயே, இளமையிலேயே செய்ய வேண்டும். ‘அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒரு நாளும் கைவிட மாட்டேன்’ என்கிறார் பரமாத்மா.

பூமாதாவுக்கு ரொம்ப சந்தோஷம். மூன்று விஷயங்களையும் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டாள். எல்லா அவதாரங்களும் வரிசையாக நடந்தது. கிருஷ்ணாவதாரம் முடிந்து வைகுண்டத்தில் பகவான் நித்யசூரிகள் புடை சூழ உள்ளான். ஸதஸ் நடக்கிறது அங்கே. அங்கிருந்தபடி, பகவான் பூலோகத்தைப் பார்க்கிறான். பூலோகத்தில் பல அக்கிரமங்கள் நடக்கின்றன. ‘பகவத் கீதையைச் சொன்னோமே! ஆனாலும் ஒன்றும் பிரயோஜனமின்றி போய்விட்டதே!’ என வருந்துகிறான். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவரும் பகவானைச் சுற்றி அமர்ந்திருக்க… மகாலட்சுமியிடம்… ”நான் கீதையைச் சொன்னது பிரயோஜனப்படவில்லை. என் வாக்கு சரியில்லை போலும்! அதனால் நீ அவதரித்து, கீதார்த்தத்தை பூலோகத்தில் சொல்லி உலகைத் திருத்த வேண்டும்” என்கிறான்.

மகாலட்சுமிக்கு வந்ததே கோபம். ”ராமாவதாரத்தில், கிருஷ்ணாவ தாரத்தில் உங்களுடன் வந்தேன். அப்போதே பல சிரமங்கள். இப்போது தனியாகப் போகச் சொல்கிறீர்களே! இது சரியா?” என்று கேட்டு, மறுத்தாள். ஆனால், பூமாதா உடனே ஏற்றுக்கொண்டுவிட்டாள்.

”நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்” என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்! எப்போது போட்ட முடிச்சு அது..? வராஹ அவதாரத்திலே, வராஹ மூர்த்தியின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, தான் கேட்ட மோட்சத்துக்கான வழிக்கு, பகவான் சொன்ன மூன்று விஷயங்களுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.

அவன் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சிக்க வேண்டும்; அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்; அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும் என 3 கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.

”இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக் கிறேன்”, என்றாள் பூமாதேவி. ”எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?” என்றார் பகவான். ”உங்களுடைய அனுக்ரஹம் உதவும்” என்று புறப்பட்டாள் தேவி. ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்தாள், கோதா எனும் திருநாமத்துடன்! கோதா என்பதற்கு பல அர்த்தங்கள். அதில் முக்கியமானவை இரண்டு.

காம் ததாதி இதி கோதா
காம் தததே இதி கோதா

காம் என்றால் நல்ல வாக்கு. அவள் நல்ல வாக்கைக் கொடுப்பவள். அவளைத் தியானித்தால், அவளின் திவ்ய மங்கல விக்கிரகத்தை தியானித்தால் நல்ல வாக்கைக் கொடுப்பாள்.

”வாக் வை சரஸ்வதி சரஸ்வதி வை வாக் சரஸ்வதி’ என்கிறது வேதம். வாக்கு என்றால் சரஸ்வதி. அமங்கலமான வார்த்தை களைப் பேசக்கூடாது. அம்ருத வாக்கைக் கொடுக்கிறாள் கோதா. அவளும் நல்ல வாக்கை உடையவள். உத்தமமான வாக்கு உடையவள் ஆகவே, நல்ல வாக்கை நமக்கும் கொடுக்கிறாள். அப்படிப்பட்ட கோதா, திருமாலை கட்ட இரு மாலை கட்டினாள். ஒரு மாலை பாமாலை; மற்றொன்று பூமாலை. பாமாலையைப் பாடி சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவன் திருவடியில் சமர்ப்பித்தாள். அதனால் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆனாள்.

ஆண்டாளை ‘பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை’ என்கிறார் வரவரமுனிகள். சின்னப் பெண்ணான ஆண்டாளுக்கு பகவானை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை எப்படித் தெரிவிப்பது என்று தெரியவில்லை.

திருமாலை (எம்பெருமானை) தன்னிடத்தில் ஈடுபடச் செய்ய திருமாலைகளை (பூமாலைகளை) தூதாக அனுப்பினாள். ”என் ஆசையை எம்பெருமானிடத்தில் தெரிவித்து, அவன் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தா’ என்று ஆண்டாள் பிரார்த்தனை செய்த அழகே அழகு! பகவானையும் ஆண்டாள்; நம்மையும் ஆள்கிறாள் என்பதால் ஆண்டாள் என்ற திருநாமம்.

வராஹ அவதாரமே இல்லை என்றால் ஆண்டாள் அவதாரம் இல்லை. அதனால் ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். அதனால்தான் நம்மாழ்வார் ‘ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே’ (திவ்ய ப்ரபந்தம் 2576 திருவிருத்தம் 99) என்கிறார். ‘அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்’ (மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்னமாலை) தோன்றியவள் ஆண்டாள். ஆழ்வார் கோஷ்டிக்கே கல்பலதிகையாக (கொடியாக) இருப்பதாலேயே இவள் அவதாரம் உயர்ந்தது.

சரி… வராஹ மூர்த்தியிடம் பூமாதா கேட்டதை ஆண்டாள் வெளியிட்டாளா?

திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘அவன் பெயர் பாடு’ என வலியுறுத்துகிறது. 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது. 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது. வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் வெளியிட்டாள் ஆண்டாள்.

திருப்பாவை என்பது தமிழ்ப் பாசுரம் மட்டுமல்ல. இது ஒரு மஹா யக்ஞம். திருப்பாவை என்ற யக்ஞத்தால் எல்லோரும் கட்டப்பட்டுள்ளோம். இது ஒரு வைஷ்ணவாத்மகமான வேத விகிதமான யக்ஞம். நாராயணனிடத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கச் சிறந்தது யக்ஞம்!

அதில், ஹவிஸை நெய்யினால் சுத்தி பண்ணி அக்னியில் சேர்க்கிறோம். ஆண்டாளும், திருப்பாவை எனும் யக்ஞத்தில், தன் உடல், பொருள், ஆவி என்கிற ஹவிஸை ஆச்சார்ய அனுக்ரஹம் (பெரியாழ்வாரின் அனுக்ரஹம்) என்ற நெய் தடவி, எம்பெருமான் வடபத்ரசாயியின் திருவடியில் சமர்ப்பிக்கிறாள்.

நாமும், நம்மை இறைப்பாதத்தில் சமர்ப்பிப்போம். மார்கழியில் திருப்பாவை பாடி, திருவருளைப் பெறுவோம்.

Written by Sri Mukkur swamy

Source : http://thiruppul.blogspot.com/

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. This article is by Sri (Vaikuntavasi) Sri Mukkur Lakshmi Narasimachar swamy,sent to me by a Bhavatha. I sent it to Sri T. Raguveera dayal swami, who is my aptha snekithar.
    Hence kindly add that” writtn by Sri Mukkur swamy” and not by Adeyen.
    Dasan,R.DEvanathan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here