Thiruther at Villivakkam Sri Sowmya Damodara Perumal Thirukkoil

0
974 views

வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலுக்கு தேர் உருவாக்கப்படுகிறது. வெள்ளோட்டம் விடுவதற்கான ஏற்பாடு தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் மிக முக்கிய அங்கம் வகிப்பது தேர்த் திருவிழா. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆரவாரத்தோடு, பக்திப் பரவசத்தோடு தேரை வடம்பிடித்து இழுப்பது கண் கொள்ளாக் காட்சி. அப்படி ஒரு காட்சி வில்லிவாக்கம் பகுதியில் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில், வில்லிவாக்கம், சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில் திருத்தேர். அறநிலையத் துறைக்குச் சொந்தமானது இந்தக் கோயில். வில்லிவாக்கம் ஸ்ரீபகவத் பாகவத கைங்கர்ய டிரஸ்ட் தேரை உபயமாகச் செய்து தருகிறது. இதையடுத்து தேரை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

பழமையானது: இதுகுறித்து, ஸ்ரீபகவத் பாகவத கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்ததாவது: 700 ஆண்டுகள் பழமையான வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவிலுக்கு தேர் ஒன்றை செய்துதர விரும்பினோம்.

27 அடி உயரத் தேர்: அதன்படி, 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 27 அடி உயரத்தில், 13 டன் எடையில் உருவாகிறது. தேரை உருவாக்கும் பொறுப்பை, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த ஸ்தபதி கல்யாணசுந்தரத்திடம் ஒப்படைத்துள்ளோம். அவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு தேர் வடிவமைப்பை, கடந்த ஒன்பது மாதங்களாக உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறது.

ஆறு அடுக்குகள்: பூதப்பார், விக்கிரகப் பார், மேல் போதியல் பார், விஸ்தாரப் பார், தேவாஸ்தனம், சிம்மாசனம் ஆகிய ஆறு அடுக்குகளைக் கொண்ட தேரின் கீழ்ப்பகுதிகள் இலுப்பை மரத்தாலும், மேல் பகுதிகள் தேக்கு மரத்தாலும் உருவாகின்றன.இந்த மரங்களின் எடை 10 டன். தேரின் நான்கு சக்கரங்களும், இரு அச்சுகளும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளின் எடை 3 டன் . தேரில் அமையவுள்ள பூ வேலைப்பாடுகள், பெருமாள் – கிருஷ்ண லீலைகள் காட்சி, தசாவதாரம் மற்றும் ஆழ்வார் சிற்பங்கள், யாளி, குதிரை தேரை தாங்கும் பூத கணங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மைலாடியில் கடந்த ஆண்டு ஜூனில் துவங்கப்பட்டு நிறைவடைந்தது.

முழுமை பெறும் பணி: அதையடுத்து, சிற்பங்களையும், பல பாகங்களையும் இணைத்து தேரை முழுமைபெற வைக்கும் பணிகள், வில்லிவாக்கம் பஜார் வீதியில் துவங்கப்பட்டு, வேகமாக நடந்து வருகின்றன. அப்பணிகளும் இந்த மாத கடைசிக்குள் முடிவடைய உள்ளன. அதன்பிறகு அடுத்த மாதத்தின் துவக்கத்தில் தேர் வெள்ளோட்டமாக மாடவீதிகளில் உலா வர இருக்கிறது. இவ்வாறு ஸ்ரீபகவத் பாகவத கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Source: Dinamalar News
Courtesy: Sri Srinivasan Rangaswamy Swami

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here