பிறவித்துயரற ஞானத்துள் நின்று

0
584

பிறவித்துயரற ஞானத்துள் நின்று,
துறவிச்சு டர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை யாழிப்படை யந்தணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே.

Meaning:

This decad of the faultless thousand by pure-hearted Satakopan addressing the perfect Madava secures freedom from rebirth.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

எம்பெருமானுடைய போக்யதையை ஆழ்வார் தாம் தமது திருவுள்ளத்தினால் முந்துற அநுபவித்து அதனை வாய்விட்டுப் பாசுரமிட்டுப் பேசுவதற்கு முன்பே இங்ஙனம் பரம போக்யமானவனை ஆச்ரயித்து வைத்து அந்தோ! அற்ப பலனாகிய கைவல்யத்தை அபேக்ஷிப்பதே! என்று கேவலர்களை நிந்தித்து, அவர்களுடைய புன்மையைப் பாராதே அவர்கள் அபேக்ஷித்ததைக் கொடுப்பதே!” என்று எம்பெருமானது நீர்மையைக் கண்டு வியந்து கூறுவது இப்பாட்டு.

கீழே *வளவேழுலகில் “செடியாரக்கையடியாரைச் சேர்ந்தல் தீர்குந் திருமாலை” என்றவிடத்து விரிவுரையை நோக்கி இவ்விடத்தையும் நோக்கினால் அந்தோ! ஈதென்ன பரஸ்பரவிருத்தமான வார்த்தை! என்று நாம் நினைக்கநேரும். அங்கே கைவல்யார்த்திகளை உயரத்தூக்கி வைத்துப் பேசியுள்ளார்; இங்கு அவர்களை கீழே தள்ளி நிந்தித்துப் பேசுகிறார்; இவை எங்ஙனே பொருந்தும்? என்று சங்கிக்கலாம் அந்தப் ப்ரகரணத்திற்கு அது பொருந்தும்; இந்த ப்ரகரணத்திற்கு இது பொருந்தும் என்பதே இங்குச் சொல்லக்கூடிய ஸமாதானம். ஆழ்வார் எம்பெருமானது பெருமேன்மையையும் தமது நைச்சியத்தையும் நோக்கிப் பின்வாங்கப்பார்த்த அவ்விடத்திலே ‘எம்பெருமானை அணுகாமலிருக்கின்ற கேவலர்கள் மிக நல்லவர்கள்’ என்று கொண்டாட வேண்டியது அவசியமாயிற்று எம்பெருமான் சீலகுணத்தைக் காட்டினபின்பு அந்த *வளவேழுலகில் நிலைமை நீங்கி விட்டதாதலாலும் அவனுடைய பரமபோக்யதையிலே இப்போது நெஞ்சு சென்றிருத்தலாலும், இப்படிப்பட்ட போக்யதையிலே எல்லாரும் ஈடுபட்டு அந்வயிக்க ப்ராப்தமாயிருக்கச் சிலர் இழந்தொழிகின்றார்களே! என்று வருந்தவேண்டிய நேர்ந்தபடியாலும் அந்த வருத்தத்தினால் கேவலர்களை நிந்திக்கிறவிது இங்குப் பொதுந்துமென்றுணர்க.

பிறவித்துயரற = ஸம்ஸார நிலத்தைப்பற்றி வரும் ஸகலமான துயரங்களும் தொலைய என்றபடி. இது கைவல்யார்த்திகளுக்குப் போலவே பகவத்ப்ராப்தி காமர்கட்கும் உண்டாயினும் இங்குக் கைவல்யார்த்திகளே விவக்ஷிதர்கள்; “அஸதி பாதகே ஸர்வம் வாக்யம் ஸாவதாரணம்” என்கிற நியாயப்படிக்கு “பிறவித்துயர் அறுவதற்காக மாத்திரம்” என்று இங்குப் பொருளாகும். பகவத்ப்ராப்திகாமர்கள் மஹாநந்தம் பெறுவதையும் விரும்புகின்றவர் களாதலால் அவர்கள் தள்ளுண்டார்கள். பிறவித்துயரறுவதை மாத்திரமே விரும்புகின்றவர்கள் கைவல்யார்த்திகளேயென்க.

ஞானத்துள் நின்று = ஆத்மாவலோகனமாகிற ஞானத்திலே நிற்பார்களாம் கேவலர்கள். கைவல்யமோக்ஷ ஸாதனமானவொரு உபாஸநத்திலே ஊன்றி என்றபடி.

துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்வார் = முதலடியிற் சொல்லப்பட்ட உபாயாருஷ்டானத்திற்குப் பலன் சொல்லுகிறது இவ்வடி. பிரக்ருதி ஸம்பந்தம் வேரற நீங்குவதுதான் இங்குத் துறவி யெனப்படுகிறது; ஞானஸ்வரூபியான ஆத்மாவை அனுபவிப்பதுதான் சுடர்விளக்கம் தலைப்பெய்தல். எல்லாவுபாதிகளும் விட்டு நீங்கப்பெற்ற சுடரொளிமயமான ஆத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கவேண்டி யிருப்பவர்கள் என்றபடி.

துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்வார் = முதலடியிற் சொல்லப்பட்ட உபாயாநுஷ்டானத்திற்குப் பலன் சொல்லுகிறது இவ்வடி பிரக்ருதி ஸம்பந்தம் வேரற நீங்குவதுதான் இங்குத் துறவி யெனப்படுகிறது; ஞானஸ்வரூபியான ஆத்மாவை அனுபவிப்பதுதான் சுடர்விளக்கம் தலைப்பெய்தல். எல்லாவுபாதிகளும் விட்டு நீங்கப்பெற்ற சுடரொளிமயாமன ஆத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கவேண்டியிருப்பவர்கள் என்றபடி.

ஆக, முன்னடிகளில் தேர்ந்த பொருளை நம்பிள்ளை யெடுத்துக்காட்டுகிறார்- ‘ஸாம்ஸாரிக ஸகல துக்கங்களும் போகவேணுமென்று ஆத்மஜ்ஞாநத்திலே ஊன்றி நின்று ப்ரக்ருதிவிநிர்முக்தமான ஆத்மஸ்வரூபத்தை ப்ராபிக்க வேண்டியிருப்பார்” என்று.

அறவனை ஆழிப்படை அந்தணனை = துறவிச் சுடர்விளக்கந் தலைப்பெய்வாரான கேவலர்கள் மறவியையின்றி மனத்துவைப்பார்; எவனை? என்னில்; எம்பெருமானை என்று சொல்லவேண்டுமிடத்து அந்த எம்பெருமானுக்கு வாசகமாக ‘அறவனை ஆழிப்படையந்தணனை” என்கிறவிது ஆழ்ந்த கருத்தோடு கூடியது. அறவன் என்பது தர்மிஷ்டன்; வைல்யார்த்திகளது விருப்பத்தின்படியையும், அப்படிப்பட்டவர்களுக்கும் பலன் கொடுக்கிற எம்பெருமான் படியையும் பார்த்து இப்படியும் ஒரு உதாரனுண்டோ! என்று ஆழ்வார் உருகியருளிச் செய்கிறபடி. இங்கே நம்பிள்ளையீடு:- “ஏதேனுமொரு ப்ரயோஜனத்துக்கும் தன்னையே அபேக்ஷிக்குமத்தனையாகாதே வேண்டுவது; எங்களுக்கு நீ வேண்டா, க்ஷுத்ரப்ரயோஜனம் அமையும் என்றிருக்குமவர்களுக்கும் அத்தைக் கொடுத்து விடுவதே! என்ன தார்மிகனோ வென்கிறார்” என்பதாம்.

ஆழிப்படை = கையுந்திருவாழியுமான அழகைக்கண்டால் “வடிவார் சோதிவலத்துறையுஞ் சுடராழியும் பல்லாண்டு” என்று மங்களாசாஸநம் பண்ணுகிறவர்களல்லரே கேவலர்கள்; தங்களுடைய விரோதிகளைத் தொலைப்பதற்கு நல்ல ஸாதனமுண்டு என்று நினைப்பவர்களே யத்தனை. அந்த நினைவையே காட்டுவதற்காம் இங்கு இந்தப் பிரயோகம்.

அந்தணனை = உலகில் ஒரு வகுப்பினரை அந்தணரென்று வழங்குவதுண்டு அந்தத்தை (வேதாந்தத்தை) அணவுபவர் – சார்பவர் என விரித்துக் காரணப் பொருளுரைத்தார் நாச்சினார்க்கினியர். (அணவுபவர் என்பது அணர் என விகாரப்பட்டது. “ஆராணத்தின் கிரமீதுறை” என்ற சடகோபரந்தாதிச் சிறப்புப்பாயிரச் செய்யுளின் ஈற்றடியில் “கார் அணனைக் கம்பனை நினைவாம்” என்றவிடம் காணத்தக்கது. அந்தம் அணர், அந்தணர் ; தொகுத்தல்)

அங்ஙனன்றியே, அம் தண் அர் எனப்பிரித்துப் பலவாறாகப் பொருள் கொள்வாருமுளர். “அந்தணரென்போரறவோர் மற்றெப் பொருட்குஞ், செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருவள்ளுவர் திருக்குறளும் அவ்விடத்துப் பரிமேலழகருடையும் நோக்கத்தக்கது. “நூலேகரகம் முக்கோல்மணையே, ஆயுங்காலை அந்தணர்க்குரிய’ என்ற தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தின் கருத்தை நோக்குமிடத்து அந்தணரென்ற சொல் யதிகளைக் குறிக்குமென்பது விளங்கும். இப்பாசுரத்தில் அந்தணனென்று எம்பெருமானைச் சொல்லியிருக்கின்றது: “கொந்தணைந்த பொழிற் கோவலுலகளப்பானடி நிமிர்த்த அந்தணனை”(பெரிய திருமொழி 5,6,7) என்றும் “இந்தளூரந்தணனை” (பெரிய திருமடல்) என்றும் திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்கிறார். அந்தணனென்பதற்குப் பரிசுத்தனென்று பொருள் என்று பூருவாசாரியர்கள் திருவுள்ளம்பற்றுகிறார்கள். வைல்யார்த்திகள் எம்பெருமானைச் சாணிச்சாறுபோலே பரிசுத்தனென்னு கொண்டார்களத்தனையொழிய போக்யதையிலே கண்வைத்து ஈடுபடப் பெற்றிலர்கள்! என்கிற வருத்தம் இங்குத் தொனிக்குமென்ப.

மறவியையின்றி மனத்துவைப்பாரே! = பரம போய்யனான எம்பெருமானைச் சந்தித்தவாறே தாங்கள் விரும்பிய கைவலய் புருஷார்த்தம் மறந்துபோக வேண்டியிருக்கவும் அதனை மறவாதே அவனை உபாஸிக்கின்றார்களே! அந்தோ! என்று பரிதபிக்கிறாராயிற்று.

இப்பாசுரத்தை அநுஸந்திக்குங்கால், “அறவாழியந்தணன் தாள்சேர்ந்தார்க்கல்லார், பிறவாழி நீந்தலரிது’ என்ற திருக்குறள் நினைவுக்கு வருமென்று பெரியார் பணிப்பர்.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here