பிரான்பெருநிலங் கீண்டவன்

0
920 views

பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்
விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,
மராமரமெய்த மாயவன், என்னுள்
இரானெனில்பின்னை யானொட்டுவேனோ.

Meaning:

He lifted the Earth from the deluge waters. He pierced an arrow through seven trees. What a wonder! The Lord who wears the fragrant Tulasi on his crown has entered into my heart, will I ever let him go?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

ஆழ்வீர்! நீர் அவனைவிடமாட்டாதொழியினும் அவன்றான் உம்மை விடில் என்செய்வீரென்ன; அவன் விடும்படியாக நான் ஸம்மதிப்பேனோ வென்கிறார்.

பிரான் = பிறர்க்கேயிருக்குமவன் என்பது கருத்து. நிலா, தென்றல், புஷ்பம் சந்தனம் முதலான பொருள்கள் தமக்கென்று ஒன்றின்றியே பிறர்க்காகவே அமைந்ததுபோல எம்பெருமானும் நம்போலியர்க்காகவே அமைந்தவனென்க “ந தே ரூபம் ந சாகாரோ நாயுதாநி ந சாஸ்பதம், ததாபி புருஷாகரோ பக்தா நாம் தவம் ப்ரகாஸே.” என்ற ஜிதாந்தாஸ்தோத்ரமும், பரிஜனபரிபர்ஹா பூஷணாந்யாயுதாநி ப்ரவரகுணகணாச் ஜ்ஞாநசக்த்யாதயஸ் தே, பரமபதமதாண்டாநி ஆத்மதேஹஸ் ததாத்மா வரத! ஸகலமேதத் ஸம்ச்ரிதார்த்தம் சகர்த்த!” (வரதராஜஸ்தவம்) என்கிற ஆழ்வான் ஸ்ரீஸூக்தியும் காண்க.

பெருநிலங்கீண்டவன் = ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டியெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹா வராஹரூபியாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருதுகோட்டினாற் குத்திக்கொன்று பாதாளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்கு நின்றுமெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பது பெருநீலக்கீண்ட வரலாறு. இப்பொழுது நடக்கி ச்வேத வராஹகல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப்பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை மேலேயெடுக்கநினைத்து மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு. “பாராருலகம் முதுமுந்நீர் பரந்த காலம் வளைமருப்பில், ஏராருருவத்தேனமா யெடுத்தவாற்றலம்மான்” என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலை நோக்குக.

பின்னும் விராய்மலர்த்துழாய்வேந்தமுடியான் = நெருங்கத் தொடுக்கப்பட்டு நறுமணம்மிக்குக் செவ்வி பெற்றிருந்துள்ள திருத்துழாய் மாலையாலே சூழப்பட்ட திருவபிஷேகத்தையுடையவன். இத்தால் திவ்யமங்கள விக்ரஹ போக்யதையை அநுபவிக்கிறபடி.

மராமரமெய்த வரலாறு “வினையேன் வினை தீர்மருந்தானாய்” என்ற பாட்டினுரையில் விரித்துரைக்கப்பட்டது காண்க. ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் என்னினாவின்னிறே எங்ஙனே விட்டுப்போகவல்லான்?

“பின்னை யான் ஒட்டுவேனோ?” என்பதற்கு- அப்பெருமான் என்னை விட்டகன்றால் நான் தரித்திருப்பேனோ? என்றும் பொருள் பணிப்பர். ஆசார்ய ஹ்ருதயத்திலும் இப்பொருள் ஆதரிக்கப்பட்டது; ‘இரானெனில் நவவாகக் குழைத்தவன்” என்ற சூர்ணிகை காண்க.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here