அகலில் அகலும் அணுகில் அணுகும்

1
1,013 views


அகலில் அகலும் அணுகில் அணுகும்,
புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,
நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,
பகலு மிரவும் படிந்து குடைந்தே.

Meaning:

My Lord is one who leaves if left, stays if restrained, My Lord is hard to reach, my Lord is easy to reach. Let using and praise his infinite glory, and enjoy his union, ceaselessly, night and day.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

என்னோடுகலந்த எம்பெருமானுடைய திருக்குணங்களை எத்தனைகாலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறப்பதில்லையென்கிறார். (அகலில் அகலும்) எம்பெருமான் எவ்விதத்திலாவது நம்மைத் தன் வலையில் அகப்படுத்திக் கொள்ளும் வழியையே பார்ப்பன்; அவனுடைய உபாயங்களையெல்லாம் பழுதாக்கி நாம் அவனது வலைக்கு அகப்படாமல் அகன்று போவதையே விரதமாகக் கொண்டிருப்போமாகில், ஐயோ! நம்முடைய க்ருஷி பலிக்கவில்லையே! என்று கண்ணீர்விட்டழுதுகொண்டே கைவாங்கி நிற்பன் என்றபடி. (அணுகில் அணுகும்) நாம் அவன்பால் நாலடி கிட்டச்சென்றால் நம்முடைய அபிநிவேசத்துக்கும் மேலாகவே அபிநிவேசங்கொண்டு அவன் நம்மைச் சூழ்ந்துகொள்வன் என்க. விபீஷணாழ்வான் போல்வார் திறத்திலே இக்குணம் காணத்தக்கது.

(புகலும் அரியன்) நல்ல எண்ணமில்லாதார்க்கு எட்டாதவன் என்றபடி துரியோதனும் அர்ஜுனமும் படைத் துணைவேண்டி வந்தபோது அஸாரங்களைப் பெற்று ஒழிந்துபோம்படியன்றோ துரியோதனனுக்கு ஆயிற்று. (பொருவல்லன்) இதற்கு ஆறாயிரப்படி:- “ஸமாச்ரயணோந்முகரா யிருப்பார்க்கு ஒரு தடையின்றியே புக்கு ஆச்ரயிக்கலாம்டி யெளியனான்” என்பதாம். “ஆச்ரிதர் தன்னைக்கிட்டுமிடத்தில் தடையுடையனல்லன்” என்பர் மற்ற வியாக்கியாதாக்களும். பொரு என்பதற்கு ‘தடை’ என்னும்பொருள் நேரே கிடைக்காதாயினும் ‘லக்ஷிதலக்ஷணை’ என்னும் முறைமையால் கிடைக்குமென்று திருவுள்ளம். (எம்மான்) ஆக இப்படிப்பட்ட தன்மைகளைக் காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவன் என்றவாறு.

நிகரிலவன் புகழ்பாடி = கீழ்ச்சொன்ன தன்மையினால் தனக்கு ஒருவரையும் ஒப்பாகக் கொள்ளப்பெறாத அந்தப் பெருமானுடைய திருக்குணங்களை இரவும் பகலும் பூர்ணநுபவம்பண்ணினும் ஓய்வுபெறுகின்றிலேன் என்றதாயிற்று.

“எம்பெருமானுடைய ஒப்பில்லாத கல்யாணகுணங்களிலே” என்ற ஆறாயிரப்படிக்குச் சேர “நிகரில வண்புகழ்” எனப் பாடமிருக்கலாமென்பர் சிலர். “நிகரில் அவன்புகழ்” எனப்பாடமிருக்கலாமென்பர் சிலர். “நகரில் அவன் புகழ்” என்று விபாகமாகலாம்.

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here