ஞாலம் புகழும் நம் தேசிகர் – உலகம் போற்றும் நம் உத்தம குரு (ஸ்ரீமத் அபிநவ தேசிக உத்தமூர் ஸ்வாமி)

1
2,107 views

ஸர்வக்ஞனாய், ஸர்வசேஷியாய், ஸர்வ ஸ்வாமியாய், ஸ்ரிய: பதியாய், ஸ்ரீவைகுண்ட நிகேதனனாய், க்ஷீராப்திநாதனாய், ஆஸ்ரித வாத்ஸல்யனாய், அவாப்த ஸமஸ்த காமனாய், அகடிதகடினா ஸாமர்த்யமுடையவனாய், ஞானம் பலம் வீர்யம் சக்தி ஐஸ்வர்யம் தேஜஸ் முதலிய குணங்களும், சௌசீல்ய சௌலப்ய வாத்ஸல்யாதி அநேக குணபூர்ணனாய (நம்பியாய்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனே, தன்னுடைய பர, வ்யூஹ, விபவ, அந்தராத்ம, அர்ச்சாதி ரூபங்களிற்காட்டிலும் ஆசார்யாவதாரத்தையே விரும்புகிறான். இந்த அவாவினை, பத்ரிகாச்ரமத்தில் நாராயண குருவாகி நரனுக்கு மந்த்ர ராஜமான திருமந்த்ரோபதேசம் செய்தும், ஸ்ரீவைகுண்டத்திலே ஸ்ரீபெரியபிராட்டியாருக்கு மந்த்ர ரத்னமான த்வய மந்த்ரோபதேசம் செய்தும், குருக்ஷேத்ரத்திலே கீதாசார்யனாகி பார்த்தனுக்கு கீதோபதேச பரமாக சரமஸ்லோகோபதேசம் செய்தும் ஆற்றிக் கொண்டான்.

இதன்றி பல ஸத்துக்களான, பரமைகாந்திகளான, அநுஷ்டாதாக்களான, வித்வத் ஸ்ரேஷ்டர்களான, மஹா யோகிகளான, க்ஞானிகளான, மஹான்களிடத்தில் அநுப்ரவேசாவதாரம் செய்தும் ஆசார்யத்வத்தையே விரும்பி நிற்கிறபடியாலே, நம்முடைய “கூரணி சீர் மதியுடைய குருக்கள்” ஆன ஆசார்யர்களும் எம்பெருமானின் அவதாரமே என்பது நம் ஸம்ப்ரதாயம்.

இந்த க்ரமத்தில், திருவேங்கடமுடையானின் கண்டாம்சமும், ஸாக்ஷாத் திருவேங்கடமுடையானின் அவதாரமும், ஸ்ரீபாஷ்யகாரரின் அபராவதாரமுமான நம், “வானேறும் வழிப்படிகள் அடைவே கண்ட வண்புகழ்த் தூப்புல் வள்ளலின்” அபராவதாரமாக எழுந்தருளியிருந்த திருமலை. நல்லான் சக்ரவர்த்தி. ஸ்ரீமத் அபிநவ தேசிக. உபயவேதாந்த. உத்தமூர். வாத்ஸ்ய வீரராகவாசார்ய மஹாதேசிகனின் வைபவத்தை, அந்த ஸ்வாமியின் 117 ஆவது திருநக்ஷத்ரம் எதிர்வரும் (03-02-2013, ஞாயிற்றுக்கிழமை) சமயத்தில் சற்றே அநுபவிக்க விழைவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நம்முடைய, ‘வேதமறிந்த பகவரான’ ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமியின் வைபவத்தை எழுத அடியேன் கிஞ்சித்தும் தகுதியற்றவனாயிருக்கிற போதும் ‘ஆசை வெட்கமறியாது’ என்கிற பழமொழிக்கு ஏற்ப, நம் ஆசார்ய ஸார்வபௌமரான ஸ்ரீமத் அபிநவ தேசிகனின் வைபவத்தை யதாமதி விண்ணப்பம் செய்கிறேன். “தெரித்து எழுதி, வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது” என்று எம்பெருமான் திறத்தில் அநுஸந்தித்த நம் திருமழிசைப்பரனின் அமுதச் சொல்லே, இங்கும் நம்மால் ஸ்ரீ ஸ்வாமியினிடத்தில் அநுஸந்திப்பதே சாலவும் தகும்.

உத்தமூர் வந்துதித்த உத்தமர்:

கடந்த 1897 ஆவது ஆங்கில வருஷம் (26-01-1897) தை மாதம் ஸ்வாதி நக்ஷத்ரத்தில், த்வயம் விளைந்த திருப்பதியாம் மதுராந்தகத்துக்கு அருகில் உத்தமநல்லூர் (உத்தமூர்) என்ற ஸ்ரீக்ராமத்தில், நல்லான் சக்ரவர்த்தி வம்ஸத்தில், ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில், ஸகல விதங்களாலும் (குலம், செல்வம், ஆசாரம், அநுஷ்டானம், க்ஞானம்) ஸ்ரேஷ்டராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ.உ.வே. ஸ்ரீநிவாஸ ராகவ சக்ரவர்த்யாசார்ய ஸ்வாமியின் திருக்குமாரராய் அவதரித்தவர் நம் ஸ்வாமி.

நம் ஸ்வாமியினுடைய பெற்றோர்கள், திருவெவ்வுளில் எழுந்தருளியிருக்கும் “தன்னடியார்க்கினியன்” ஆன ஸ்ரீ கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ வீரராகவனிடத்தில் ஸந்ததி வேண்டி செய்த ப்ரார்த்தனையின் பலனாய் திருவவதரித்தார் நம் ஸ்வாமி. வீரராகவன் அருளாலே திருவவதாரம் செய்தருளினபடியால் “வீரராகவன்” என்றே திருநாமகரணம் செய்யப் பெற்றார். குலத்துக்குரிய அனைத்து ஸம்ஸ்காரங்களும் அவ்வோ கால க்ரமங்களிலே கண்டருளிய நம் ஸ்வாமி, தன்னிகரற்ற விஸ்தாரமும் விலக்ஷணமுமான மஹாக்ஞானமுடன் வேதம், ப்ரபந்தம், சாஸ்த்ரம், ஆகமம், பூர்வாசார்ய ஸ்ரீஸுக்திகள், ஸத்க்ரந்தங்கள் என தொட்ட துறைகளிலெல்லாம் துலங்கி மஹாவித்வானாகத் திகழ்ந்தார். சிறந்த ஆசார சீலராகவும், அனுஷ்டாதாவாகவும், மஹாக்ஞானியாகவும், ஆத்மகுண பூர்ணராகவும், சிறந்த ஸத் சிஷ்யராகவும், ஸத்தான ஸதாசார்யனாகவும் திகழ்ந்தவர் நம் உத்தமூர் ஸ்வாமி.

நம் ஸ்வாமி, ஸ்ரீ கேதாண்டப்பட்டி ஸ்வாமியினுடைய திருவடியான ஸ்ரீ திருப்பதி ஸ்வாமி.பரம. பரி. ஸ்ரீ வேதாந்த ராமாநுஜ மஹாதேசிகனிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றும், ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமி. பரம. பரி. ஸ்ரீ ரங்க ராமாநுஜ மஹாதேசிகன் திருவடிகளில் பரஸமர்ப்பணம் அநுஷ்டித்தும் க்ருதக்ருத்யராய் வேதாந்த காலக்ஷேபமும் கேட்டார்.

பின்னர், திருவையாறு ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் ந்யாய, மீமாம்ஸா ஸாஸ்த்ரங்களைப் பயின்று, அந்த ஸாஸ்த்ரங்களில் தலைசிறந்த அதிகாரியானார் நம் ஸ்வாமி. இது மட்டுமின்றி ந்யாய – வைசேஷிக ஸாஸ்த்ரம், யோக ஸாஸ்த்ரம், ஸாங்க்யம், பௌத்தம், ஜைனம், அத்வைத வேதாந்தம், விசிஷ்டாத்வைத வேதாந்தம், என பல துறைகளிலும் மஹா மேதாவியாய் உபய வேதாந்த வித்வானாய் ப்ரகாசித்தார்.பின்னாளில், திருவையாறு ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் உபாத்யாயராகவும், புஷ்கரத்தில் சாஸ்த்ர ப்ரவசந ஆசிரியராகவும் எழுந்தருளியிருந்து பல ஸத்தான வித்வான்களை உருவாக்கினார். பிறகு திருப்பதி ஸ்ரீவேங்கடேஸ்வரா ஓரியண்டல் கல்லூரியில் பல காலம் முதல்வராக எழுந்தருளியிருந்து இறுதியாக சென்னையில் நித்ய வாஸம் செய்தார்.

நம் ஸ்வாமி, ந்யாய ஸாஸ்த்ரம், விசிஷ்டாத்வைத வேதாந்தம், ஸ்ரீபாஞ்சராத்ர பகவத் ஸாஸ்த்ரம், ஸ்ரீ வைகானஸ ஆகமம் முதலியவைகளைப் பல வித்தியார்த்திகளுக்குச் சொல்லி வைத்து, அவர்களை நிறம் பெறச் செய்தருளினார். 1960 ஆம் ஆண்டில் பாரத ஜனாதிபதியாக பதவி வகித்த Dr.ராஜேந்த்ர ப்ரசாத் அவர்களால், ஸம்ஸ்க்ருத பாஷையில் மேதாவிலாஸத்துக்காக ராஷ்ட்ரபதி விருதை ஸமர்ப்பித்துக் கொண்டாடப்பட்டார். இந்த துறையில் ராஷ்ட்ரபதியால் முதன்முதலாக ஸம்மானிக்கப்பட்டவர் நம் ஸ்வாமியே ஆவார்.

“அத்யாத்ம க்ரந்த நிர்மாணம்
அநேகேஷாம் ச தபோதனம்!
அர்ச்சாவதார ஸேவா ச
தேஷாம் ஏதத் மஹத் பலம்!!”

என்கிறபடிக்கு “செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்” ஆன நம் ஸ்வாமி, த்ரமிட பாஷையான தமிழிலும், தேவபாஷையான ஸம்ஸ்க்ருதத்திலும், மணிப்ரவாளத்திலுமாக 145 ஸத் க்ரந்தங்களை அருளிச் செய்தார் – அத்யாத்ம க்ரந்த நிர்மாணம்.

எண்ணற்ற ஸத் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாய ப்ரவசந முகமாய் வித்யா தானம் மற்றும் விஷய தானம் செய்து அவர்களின் அஞ்ஞானம் அழிந்து க்ஞானம் ப்ரகாசிக்கும்படி காலக்ஷேபங்களும் செய்தருளிப் போந்தார் – அநேகேஷாம் ச தபோதனம்.

அர்ச்சாவதார எம்பெருமான்களிடத்தில் அதி ப்ரவணராய், குறிப்பாகத் திருவேங்கடமுடையானையே தாரக போஷக போக்யமாய்க் கொண்டவர். ஆகமங்கள் பயிற்றுவித்ததின் மூலம் பல அர்ச்சகர்களை உருவாக்கி அர்ச்சாவதார ஸேவை செய்ய உதவியருளினார் – அர்ச்சாவதார ஸேவா.

மேற்கண்ட ஸ்லோகத்தின்படி ஸதாசார்யனக்குரிய பூர்த்திகள் எல்லாம் ஸ்வாபாவிகமாகவே ப்ரகாசிப்பவராய், “தத்துவங்கள் எல்லாம் தகவால் அறிவித்து முத்தி வழி தந்த” ஸதாசார்யனாய் பல சேதனர்களுக்கு ஸமாஸ்ரயண பரந்யாஸாதிகளைச் செய்து வைத்துக் கொண்டு அவர்களைக் கடைத்தேற்றினார் – ஆசார்ய தேவோ பவ!

உபய வேதாந்தங்களிலும் மஹா மேதாவிலாஸமுடைய நம் ஸ்வாமி, தத்வ ஹித புருஷார்த்தங்களை விளக்கும் வகையில் தாம் அருளிச் செய்த க்ரந்தங்களை எல்லாம், “உபய வேதாந்த க்ரந்த மாலை” என்ற பெயரில் அவற்றைத் தாமே ப்ரசுரித்தருளினார். ஸ்ரீஸ்வாமியின் இந்த ஈரச் செயலால், அவருடைய விபவ காலத்தில் அவரது திருவடிகளை ஆஸ்ரயித்த சிஷ்ய வர்க்கத்தை மட்டுமின்றி
பிற்காலத்து ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நம்மையும் க்ரந்த முகேந விஷயதானம் செய்து ஸ்வரூப க்ஞானம் ப்ரஸாதித்து உய்வித்தருளினார். இந்த பரம க்ருபை மூலம், எண்ணிலடங்காத ஸ்ரீவைஷ்ணவர்களின் இருளனைத்து எழில்ஞான விளக்கை ஏற்றியருளிய தீபப்ரகாசராய்த் திகழ்கிறார் நம் ஸ்வாமி.

ஸ்ரீ ஸ்வாமியின் க்ரந்தங்களில் சில:

  • 1. ப்ரபந்த ரக்ஷை – நாலாயிர திவ்ய ப்ரபந்தத்துக்கு உரை
  • 2. உபநிஷத் பாஷ்யம்
  • 3. கௌதம மஹரிஷியின் ந்யாய ஸாஸ்த்ரத்துக்கு உரை
  • 4. உதயணாச்சார்யரின் ந்யாய குஸுமாஞ்சலிக்கு உரை
  • 5. உபநிஷத் ஸாரம்
  • 6. உபநிஷதார்த்த ஸங்க்ரஹம்
  • 7. வேதாந்த புஷ்பாஞ்சலி
  • 8.ஆஹ்நிகம்
  • 9. பஞ்ச க்ரந்தி
  • 10. உபயுக்த பாராயணம்
  • 11. தர்க்க ஸங்க்ரஹம்
  • 12.வைசேஷிக தர்ஸனம்
  • 13. வைகானஸ விஜயம்
  • 14. ஸ்ரீ ஆளவந்தாரின் ஸித்தித்ரயம், சதுஸ்லோகீ, ஸ்தோத்ர ரத்னம் முதலிய க்ரந்தங்களுக்கு உரை
  • 15. ஸ்ரீ பகவத் பாஷ்யகாரரின் ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம் முதலிய க்ரந்தங்களுக்கு உரை
  • 16. கீதார்த்தம் – ஸ்ரீமத் பகவத் கீதைக்கு, ஸ்ரீ ஆளவந்தாரின் கீதார்த்த ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யகாரரின் கீதாபாஷ்யம் மற்றும் ஸ்ரீதேசிகனின் கீதார்த்த ஸங்க்ரஹம் முதலிய க்ரந்தங்களைத் தழுவிய உரை
  • 17. ஸ்ரீ நடாதூரம்மாளின் ப்ரபன்ன பாரிஜாதம், தத்வஸாரம் முதலிய க்ரந்தங்களுக்கு உரை
  • 18. ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் பரமதபங்கம், ஸேஸ்வர மீமாம்ஸா, மீமாம்ஸா பாதுகா, ந்யாய பரிசுத்தி, ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம், ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை, அதிகரண ஸாராவளி, தத்வமுக்தாகலாபத்துக்கு ஸ்ரீதேசிகன் தாமே அருளிய உரையான ஸர்வார்த்த ஸித்தி, யாதவாப்யுதயம், ஹம்ஸ ஸந்தேசம், ஸங்கல்ப ஸுர்யோதயம், ஸுபாஷித நீவி, ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் முதலிய க்ரந்தங்களுக்கு உரை
  • 19. ஸ்ரீதேசிகனின் ந்யாய ஸித்தாஞ்சனத்துக்கு பூமிகை
  • 21. ஸங்க்ஷேப ராமாயணத்துக்கு உரை
  • 22. ரக்ஷா க்ரந்தங்களுக்கு உரை
  • 23. ஸ்ரீபாஷ்ய ஸாரம்
  • 24. பரமார்த்த பூஷணம் (ஸ்வாமியின் நண்பரான அனந்த க்ருஷ்ண ஸாஸ்த்ரி என்பவர், ஸ்ரீதேசிகனின் ‘சததூஷணி’க்கு எதிராக ‘சதபூஷணி’ நூல் செய்தார். அதற்கு மறுப்பாக ஸ்ரீமத் அபிநவதேசிகனான நம் ஸ்வாமி அருளியதே இந்த க்ரந்தம். இது ஸ்வாமியினுடைய MAGNUM OPUS ஆகத் திகழ்கிறது.

நம் ஸ்வாமி, இது தவிர பல வித்வத் ஸதஸ்ஸுக்களை அத்யக்ஷராக எழுந்தருளியிருந்து நடத்தி வைத்துள்ளார். எத்தனையோ விழா மலர்களில் தம் அத்யத்புதமான வ்யாஸங்களை எழுதியுள்ளார்.

ரக்ஷைக்கே ரக்ஷை பண்ணிய ரக்ஷகர்:

நம் தர்ஸனத்துக்காகத் (ஸம்ப்ரதாயத்துக்காக) தம் தர்சனத்தை (பார்வையை) த்யாகம் செய்தருளிய ஸ்ரீகூரேசரின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், “நம் திருவரங்கநாதனுக்கு ரக்ஷையாக விளங்குபவை, கருங்கற்களாலான மதிள் சுவர்கள் அல்ல, ஆழ்வார்களின் அருளிச்செயல்களே” என்று அத்புதமாக ஸாதித்தருளியுள்ளபடி. அகிலம் அனைத்துக்கும் ரக்ஷையாக விளங்கும் ஜகத் ரக்ஷகனுக்கே ரக்ஷையாக விளங்கும் அருளிச் செயல்களுக்கே ரக்ஷை (ப்ரபந்த ரக்ஷை) பண்ணிய ரக்ஷகர் நம் ஸ்வாமியே.

நம் ஸ்வாமியை அடைந்து பெருமை பெற்ற பிருதங்கள்:

  • 1. அபிநவ தேசிகன்
  • 2. உபய மீமாம்ஸா வல்லப
  • 3. பண்டித மார்த்தாண்ட
  • 4. பண்டித பூஷண
  • 5. தேசிக தர்ஸந துரந்தர
  • 6. உபய வேதாந்த விஜயத்வஜ
  • 7. ஸர்வாத்ம ரக்ஷாமணி
  • 8. பூர்வோத்தர மீமாம்ஸா ப்ரதீப
  • 9. ப்ராகாசிக ப்ரகாசக
  • 10. தர்க்கார்ணவ
  • 11. பண்டித ரத்ன

நம் ஸ்வாமி, தாம் அருளிச் செய்யும் க்ரந்தங்களுக்கு வரைந்தருளும் பூமிகையே அத்யத்புதமாக, அந்த க்ரந்தத்தின் முக்ய அம்சங்களையும் தாத்பர்யங்களையும் தாங்கி நிற்கும் பெருமையுடைத்து, என்று ஸ்ரீதேசிக பக்தரத்னம். ஸ்ரீ.உ.வே. ஸேவா ஸ்ரீநிவாஸ ராகவாசார்ய ஸ்வாமியே போற்றியுள்ளபடி.

ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி தனியன்:

அத்புதம் யஸ்ய விக்ராந்தம் வேதவீதீ விசோதனே|
அபரம் நிகமாந்தார்யம் ப்ரபத்யே வீரராகவம்||

ரங்கராமானுஜோத்துங்க தயாபாத்ரம் குணோஜ்ஜ்வலம்|
ஸ்ரீ வீரராகவாசார்யம் வந்தே அபிநவதேசிகம்||

உத்தமூர் ஸ்ரீமத் அபிநவ தேசிக வாத்ஸ்ய வீரராகவார்ய மஹா தேசிகாய நம:

(* நம் ஸ்வாமியின் தனியனின் விசேஷம்: சிஷ்யர்களே ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்ப்பிப்பது வழக்கம். நம் ஸ்வாமி விஷயத்திலோ அநிதர ஸாதாரணமாக, ஸ்வாமியின் ஸதாசார்யனான ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமியே தனியனை ப்ரஸாதித்தருளியபடி.)

“தேனார் கமலத் திருமகள்நாதன் திகழ்ந்துறையும் வானாடுகந்தார்:

அநிதர ஸாதாரணராய், மஹா வைபவசாலியாய், ஸதாசார்ய ச்ரேஷ்டராய், மஹா வ்யாக்யாதாவாய்,
ஸ்ரீதேசிக தர்ஸந ப்ரவர்த்தகராய், த்ரமிட வேத ரக்ஷகராய், உபயவேதாந்த ப்ரவர்த்தகாசார்யராய் எழுந்தருளியிருந்த நம் “வேதத் திரளின் விதி உணர்ந்து” நம்மையும் உணரச் செய்த ஸ்ரீமத் அபிநவ தேசிகன், “உலகளந்த வளர் தாமரையிணை வண்சரணாக வரித்து”, “தேனார் கமலத்
திருமகள்நாதன் திகழ்ந்துறையும் வானாடுகந்து”, “தன்னடிச் சோதியை” அலங்கரிக்கத் திருவுள்ளம் கொண்டு, தம் திருவவதார நோக்கம் பாங்காக நிறைவேறினபடியால், கடந்த 1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதீயை திதி அன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

லோகோஜ்ஜீவனார்த்த பரமாய் இத்துணை மஹோபகாரங்கள் செய்தருளிய நம் ஸ்வாமிக்கு நாம் தலையல்லால் கைம்மாறிலோம்.

“ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனனத்து
மாற்றினவர்க்கொரு கைம்மாறு மாயனும் காணகில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்ச்
சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே”

என்ற நம் தூப்புல் மாபுருடனின் பாசுரத்தை, ஸ்ரீமத் அபிநவ தேசிகனின் திறத்தில் அநுஸந்தித்து ஸத்தைப் பெறுவோம்.

ஸ்ரீமத் அபிநவ தேசிக பாதுகாப்யாம் நம:

Sri uttamur swamy’s books are available for sale at:

Sri uthamur veeraragavachariar centenary trust,
7/19, NATHAMUNI ST, T.NAGAR,
CHENNAI – 600 017.
[next lane to murugan idly shop in g.n chetty road)
PHONE: 044 – 2815 6053

Courtesy: Sri Raaghava Nrusimha Dhaasan

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here