திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் இன்று எட்டாம் நாள் – காலை ‘வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம்’. மிகச் சிறந்த இதிஹாசமான மஹா பார்தது நாயகன் கண்ணன் தன் பால்ய பருவ லீலைகள் தொடங்கி முழு வாழ்க்கையையும் பாடமாக தந்தவன். ஸ்ரீ பார்த்தசாரதி, கண்ணனாக, கண்ணன் சிறு வயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான ‘வெண்ணை விழுங்கிய கண்ணனாக’ – தவழும் கண்ணனாக, வெண்ணை தாழியுடன் அழகான சாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார். உபய நாச்சிமார் தனியாக பல்லக்கிலும், அவர்களுக்கு காவலாக சேனை முதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.
பெரியாழ்வார் தான் அருளிச்செய்த ‘பெரியாழ்வார் திருமொழியில்’ கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கி பாடியுள்ளார். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச்சதங்கைகள் கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நடக்கும் அழகை ‘தொடர் சங்கிலிகை சலார் பிலார்’ எனவும்; கண்ணன் வெண்ணை உண்ட அழகை, ” தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய எம்பிரான்” எனவும் பலவாறாக அனுபவிக்கிறார்.
“கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்” – என அவரது பாடல். குழந்தை கண்ணன் – “குழையச்சமைத்த பருப்பையும், வெண்ணெயையும், விழுங்கி விட்டு – குடத்தில் நிறைந்த தயிரை (அந்தக் குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டு, அசுரரை அழித்தவன். அத்தைகைய கண்ணன் “பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்” – யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப்பதாக எடுக்க, பயத்தை காண்பித்தவாறு தவழ்ந்து ஓடினானம் !”. பிறிதொரு இடத்தில் “தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* – என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார்.
இவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும் விதமாக, இன்று திருவல்லிக்கேணியில், ஸ்ரீ பார்த்தசாரதி, வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே…
Write-up and Photo Courtesy: Sri Srinivasan Sampathkumar
For previous days’ utsavam photographs, please visit
http://anudinam.org/2013/04/30/thiruvallikeni-sri-parthasarathy-thirukkoil-brahmotsavam-thiruther/
http://anudinam.org/2013/04/28/sri-parthasarathy-swami-brahmothsavam-aaram-thirunal/
http://anudinam.org/2013/04/24/thiruvallikkeni-sri-parthasarathy-swami-brahmothsavam/