Garudapuram Tirumalai Eechampadi Sri Sudharsanaarya Mahadesikan Vaibhavam

0
420
Sri Sudharsanaarya Mahadesikan (Sri Garudapuram Swami) Pic Courtesy: Pbase

கருடபுரம் திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ ஸுதர்ஸனார்ய மஹாதேசிகன் வைபவம்

 • அவதாரம்: மன்மத ஐப்பசி பூரட்டாதி ( 29.10.1895)
 • நிகமனம்: விபவ ஐப்பசி சுக்ல தசமி (1928)
 • த்விதீய ஷஷ்டியப்த பூர்த்தி மஹோத்ஸவம் : நிகழும் மனமத ஐப்பசி பூரட்டாதி (24.10.15)
 • குலப்பெருமை

  நம் ஸ்வாமி அவதரித்த கோத்ரம் வஸிஷ்டருடைய ஸம்மந்தமுடைய கௌண்டிந்ய கோத்ரம். இந்த பெருமைமிகு. திருவம்சம் அழகப்பிரான என்கிற ஈசாண்டானை கூடஸ்தராக கொண்டது. ஈசாண்டான் ஸ்ரீபாஷ்யகாரருக்கு ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தையும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரத்தையும் உபதேசித்த பெருமையுடையவர். . ஈசாண்டான் ஸ்ரீ ஆளவந்தாரின் ப்ரதான சிஷ்யராவார்.

  இந்த மஹான் அருளிய ஒரு ஸ்ரீஸூக்தியின் ஒரு பகுதியை ஸ்வாமி தேசிகன் தனது சரம க்ரந்தமான ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம்-பரதேவதா பாரமார்த்யாதிகாரத்தில் மேற்கோளிட்டு உள்ளதிலுருந்து அவர் பெருமை மேலும் மிளிர்கிறது. மேலும் ஈசாண்டான் திருமலையில் திருவேங்கடமுடையானுக்குப் புரோஹிதராய் இருந்த பெருமையுடையவர். இப்பொழுதும் திருமலையில் செண்பக(முதல்) ப்ரகாரத்தில் திகழும் ஹேமகூபம் (அழகப்பிரான் கிணறு) தன்னை நிர்மானித்து திருவேங்கட முடையானுக்குத் தினசரி தீர்த்தம் ஸமர்பித்தவர் இவர் வம்சத்தினரான ஈச்சம்பாடி ஆச்சான் என்ற ஸ்ரீநிவாஸாச்சார்யர் மற்றும் ஈச்சம்பாடி ஜீயர் ஆகிய இருவரும் ஸ்ரீபாஷ்யகாரரிடமே ஸந்யாஸம் பெற்று 74 ஸிம்ஹாஸனாதிபதிகளில் ஸுப்ரஸித்தர்களாய் விளங்கினர். காலக்ரமத்தில் திருத்தணியை அடுத்த ஈச்சம்பாடி என்ற ஸ்ரீக்ராமத்தில் குடியேறிய படியால் இவ்வம்ஸத்தினர் திருமலை ஈச்சம்பாடியார் என்று அழைக்க பெற்றனர். பிற்காலத்தில் ஸ்ரீப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர ஸ்வாமி இவ்வம்சத்தில் தோன்றி ஸ்வாமி தேசிகனை ஆச்ரயித்துப் பின் ஸ்ரீ பரகாலமடத்திற்கு மூலபுருஷரானார்..

  Sri Sudharsanaarya Mahadesikan (Sri Garudapuram Swami) Pic Courtesy: Pbase
  Sri Sudharsanaarya Mahadesikan (Sri Garudapuram Swami)
  Image Courtesy: Pbase

  திரு அவதாரம்

  இத்தகு பெருமை பெற்ற திருமலை ஈச்சம்பாடி வம்சத்தினர் ஒருபிரிவினர் ப்ரசித்தி பெற்ற தொண்டைமண்டலத்தில் மதுராந்தகம் அருகில் உள்ள கருடபுரம் என்ற ஸ்ரீக்ராமத்தில் வசித்து வந்தனர்..ஆகையால் இப்பிரிவினர் கருடபுரம் திருமலை ஈச்சம்பாடியார் என்று அழைக்க பெற்றனர். அவர்களில் ஸப்த கருடர்கள் என்று ப்ரஸித்திபெற்ற ஏழு சஹோதரர்கள் ஒரத்தி என்ற ஸ்ரீக்ராமத்திற்கு அவ்வூர் வாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி வந்து வசிக்கலாயினர். அவர்களில் மூன்றாமவரான ஸ்ரீ.உப.வே வேங்கடாசார்யர் ப்ரஸித்த உபயவேதாந்தியாய் திகழ்ந்தார். இவர் ஸ்வாமி தேசிகனின் ரஹஸ்ய த்ரயஸாரத்தை அடிபிறழாமல் கண்டஸ்தமாக வைத்திருந்து, கதிசிந்தநாதிகாரத்தை சொல்லிக்கொண்டே தன்னடிச்சோதி எழுந்தருளினார். இப்படிப்பட்ட ஸ்ரீ.உப.வே வேங்கடாசார்யர் முக்கூர் ஸ்ரீக்ராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி கல்யாணி அம்மாள் தம்பதியரின் ஒரே ஸீமந்த புத்திரராக நம் ஸ்வாமி ஸ்ரீ ஸுதர்ஸனாச்சார்யர் மன்மத வருஷம் ஐப்பசி மாதம் பூரட்டாதி திருநக்ஷத்திரத்தில் அவதரித்தார் ( 29.10.1895.)

  நம் ஸ்வாமிக்கு பால்யத்திலேயே பிதா வியோகம் சம்பவித்தபடியால் சிரிய தகப்பனாரான ஸ்ரீ உப வே கிருஷ்ணமாச்சாரியார் (ஸப்தகருடர்களில் ஒருவர்)
  நம் ஸ்வாமியிடம் புத்ரவாத்ஸல்யத்தை பொழிந்து காத்தார்.

  யதாகாலத்தில் உபநயன ஸம்ஸ்காராதிகள் நடைபெற்று ஸ்ரீ ஸுதர்ஸனாச்சார்யர் சிறு வயதிலேயே ஏகஸந்த க்ராகியாக திகழ்ந்து பூர்ண வேதாத்யாயியாக வாழ்ந்தார். பாஞ்சராத்ர ஆகமத்தில் நிபுணராகவும் விளங்கினார்.

  விவாஹம்

  மதுராந்தகம் அருகில் உள்ள போந்தூர் என்ற க்ராமத்தில் மஹாபண்டிதராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ.உப.வே வேங்கடவராஹாச்சாரியார் ஸ்வாமியின் குமாரத்தியான ஸ்ரீமதி ஸீதா அம்மாளை 1910ல் தனது 15ம் ப்ராயத்தில் பாணிக்ரஹனம் செய்தார். விவாஹத்திற்கு பிறகு தன் மாமனாரான ஸ்ரீ உப வே ஸ்ரீவேங்கடவராஹாச்சாரியார் ஆறே மாதங்களில் ஸாஹித்யம் மற்றும் சாமான்ய சாஸ்திரங்களை பயிற்றுவித்தார். நம் ஸ்வாமி பூர்ண அத்யாயியாக இருந்தார். இவர் திருவை சொல்வதை கேட்டே இவரது பத்நீ சௌ. ஸீதா அம்மாள் யஜுர் வேதம் மூன்று, நான்காம் காண்டங்கள் உபஸ்திதமாக கேள்வி ஞானம் பெற்று இருந்தாள்.(பெண் என்பதால் ப்ரவசனம் செய்ய முடியாது அந்த காலத்தில்) மற்றும் அமரகோஸத்தையும்,முக்தக ஸ்லோகங்களையும் கண்டஸ்தமாக வைத்திருந்தாள். இன் நிகழ்வுகள் நம் ஸ்வாமியின் அத்யயன சீலத்திற்கு உதாஹரணமாய் திகழ்ந்தது எனலாம். ப்ரகரண க்ரந்தகாலக்ஷேபங்களை பூர்த்தி செய்து ப்ரவசனமும் செய்தவந்தார்.

  ஆசார்யகம்

  இந்த ஸ்வாமி நிறைய சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் உபநயன ஸம்ஸ்காரங்களை செய்துவைத்து அவர்கள் உஞ்ஜீவிக்க அருளினார். க்ராமம் க்ராமமாக இவரிடம் பல பேர் ஆச்ரயித்தார்கள்.

  தனது இளைய ப்ராயத்திலேயே காஞ்சீ மாநகரில் நடந்த வாத ப்ரதிவாத ரூபமான ஸதஸ்ஸில் வாகைசூடினார். இதனால் இவரிடம் தோற்றவர்கள் இவரது ஞானம் மற்றும் வாதஸைலி மேல் அசூயையோடு இருந்தனர். ஆனால் நம் ஸ்வாமியோ அவர்களிடம் விரோதம் பாராட்டாமல் அவர்களிடம் இருந்து தள்ளியே வர்த்தித்தார்.

  இந்த ஸ்வாமி தன் தசராத்ர பங்காளி முறையில் புத்ரஸ்தானீயரான கருடபுரம் ராஜகோபாலாச்சாரியாருக்கு க்ரோதந வருடம் மார்கழி 1925 ஆம் ஆண்டு துரீயாச்ரம ஸ்வீகாரத்தை தானே முன் நின்று ஜீவச்ரார்த்தம் முதலிய சீரிய கர்மாக்களை தனது திருமாளிகையிலேயே நடத்தி, அப்பொழுது ஒரத்தி க்ராமத்திற்கு எழுந்தருளியிருந்த புத்தஹரம் ஸ்வாமி என்ற யதிவரரிடம் ப்ரேஷமந்த்ர, காஷாயக்ரஹணமும் செய்துவித்தருளினார். பின்னர் இந்த ஸ்வாமி காஞ்சீபுரத்தில் ஸ்ரீநிவாஸ மஹாதேசிகன் (கருடபுரம் ஸ்வாமி) என்ற திருநாமத்துடன் திகழ்ந்தார். இந்த நிகழ்வே நம் ஸ்வாமியின் பாண்டித்யத்திற்கு முத்தாய்ப்பானது. மேலும் தம் இளம் ப்ராயத்திலேயே ஸ்ரீமுஷ்ணம் பூவராஹஸ்வாமி கோவில் சம்ப்ரோக்ஷணத்தை எல்லாரும் போற்றும்படி ஆகம விதிகள் மீறாமல் நடத்தி காட்டினார். இது பாஞ்சராத்ர ஆகம பாண்டித்யத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தது எனலாம்.

  ஸத்ஸந்ததி ப்ராப்தி

  இந்த தம்பதியரின் ஸீமந்த புத்ரியாக அம்புஜம் என்கிற கன்யா ரத்நம் 1914ல் பிறந்தாள். இந்த பெண்மணிக்கு ஸ்வாமி தேசிக ஸ்தோத்ரபாடங்கள் மற்றும் சங்கீத ஞானத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். இவள் ஸ்வாமி தேசிகனின் ரஹஸ்ய த்ரயஸாரம்,பாதுகாஸஹஸ்ரம், முதலாயிரம் பூர்த்தியும் கண்டஸ்தமாக வைத்திருந்தாள். பல சாஸ்திர ஞானம் பொதிந்த பாடல்களை கவனம் செய்து மதுரமான குரலில் பாடுவாள் பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு இப்பேர்பட்ட ஞானத்தை இந்த ஸ்வாமி சிறுப்ராயத்திலேயே வித்திட்டார்.

  இந்த கன்னிகையை இளநகர் கட்டம் வரதாச்சாரியாருக்கு (இவர் மிகச்சிறந்த பௌரானிகர் 1927ல் கன்யாதானம் செய்து வைத்தார். ஒப்பிலியப்பன் முன் சுப்ரபாதத்தின் போதும் சயனத்தின் போதும் உள்ளம் உருகி தான் கவனம் செய்த அர்தபுஷ்டிமிக்க பாடல்களை பாடுவாள். ஒப்பிலியப்பன் கோவிலில் வாசம் செய்து திரு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை கோடி ஆவர்த்தி செய்து மந்த்ரஸித்தி பெற்றாள். இந்த தம்பதி திருவநந்தபுரம் ராஜாவினால் கௌரவிக்க பெற்றவர்கள்.

  இத்தகு ஸ்ரீ.உப.வே ஸுதர்ஸனாச்சார்யர்- ஸ்ரீமதி ஸீதா அம்மாள் தம்பதியினரின் தவக்குமாரர் ரக்தாக்ஷி வருஷம் தை புனர்வசு நக்ஷத்திரத்தில் (06-02-1925) ஒரத்தி க்ராமத்தில் திருவவதாரம் செய்தார். ஸ்ரீராமன் அவதரித்த புனர்வசு நக்ஷத்திரத்தில் அவதரித்ததனால் ரகுநந்தனன் என்ற திருநாமம் சூட்டபட்டது. (ராமு என்ற பெயருடனும் அழைக்க பெற்றார்)
  இந்த ஸ்வாமி ஸ்ரீ.உப வே வேங்கடார்ய மஹாதேசிகனாக ப்ரசித்திபெற்ற பண்டிதராக திகழ்ந்து அண்மையில் நவதி அப்த பூர்த்தி உத்ஸவம் (02-02-15) ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில் வேத திவ்யப்ரபந்த ஸ்ரீமத் ராமாயண க்ரந்த சதுஷ்டய பாராயணங்களுடன் விமர்சையாகநடைபெற்று, அவ்வமயம் “கௌண்டின்ய குல கௌஸ்துபம்“ என்ற பெயர் கொண்ட மலரில் “யஞ்யோபவீத மீமாம்ஸை” என்ற புத்தகத்தை மறு ப்ரசுரம் செய்து நூல் வெளீயீட்டுவிழாவும் நடைபெற்றது.

  நிகமனம்

  இப்படி வைபவத்துடன் பண்டிதர்களால் போற்றபெற்று சிஷ்யகோடிகளால் வணங்கபெற்று திகழ்ந்த நம் ஸ்வாமியை இந்த பூலோக வாசம் போரும் என்று எண்ணினான் போலும் விபவ வருஷம் 1928ல் ஐப்பசி மாதம் தசமி திதியில் இவருடைய 33ம் ப்ராயத்திலேயே தன் திருவடிச்சோதிக்கு அழைத்துக்கொண்டான் சரண்யன்.

  இந்த ஸ்வாமியின் 121வது திருநக்ஷத்திரம் (த்விதீய ஷஷ்டியப்த பூர்த்தி மஹோத்ஸவம்) ஸ்ரீரங்கத்தில் பூர்ண வேதபாராயணங்களூடன் கடந்த 12.10.15 திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழும் மனமத வருஷம் ஐப்பசி பூரட்டாதி திருநந்நாளில் 24.10.15 அன்று பெரிய சாற்றுமுறையுடன் க்ஷேத்ராதீசன் ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாதன் அனுக்ரஹத்தை அவலம்பித்து நடைபெறவுள்ளது.

  Courtesy: Sri Veeravalli Raghunathan

  Print Friendly, PDF & Email

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here