Thirumaalai – 26th Paasuram

0
640 views

போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்

தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்

காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே

ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே.

Thirumaalai 26 – Thondaradipoidazhwar

பதவுரை

போது எல்லாம்

எல்லாக் காலங்களிலும்
போது கொண்டு

பூக்களைக் கொண்டு
உன் பொன்அடி புனைய மாட்டேன்

உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்;
தீது இலாமொழிகள் கொண்டு

குற்றமற்ற சொற்களினால்
உன் திருக்குணம் செப்பமாட்டேன்

உன்னுடைய நற்குணங்களைக் கீர்த்தநம் செய்யமாட்டுவேனல்லேன்;
காதலால் அன்பு

உண்மையான பக்தியால் உண்டாகிற அபிநிவேசத்தை
நெஞ்சம்

நெஞ்சிலே
கலந்திலேன்

வைத்துக் கொண்டிருக்கின்றேனில்லை;
அது தன்னாலே

ஆதலால்
அரங்கர்க்கு

அழகிய மணவாளனாகிய தேவரீர்க்கு
ஏதிலேன்

ஒரு காரணத்தாலும் ஸ்பர்சிக்கப் பெற்றவனல்லேன்;

(இப்படிப்பட்ட நான்)

என் செய்வான் தோன்றினேனே

எதற்காகப் பிறந்தேனோ (அறியேன்)
எல்லே ஐயோ!

 விளக்க உரை

***- “கடல்வண்ணா! கடல்வண்ணா!!” என்று கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ‘த்ரைவர்ணிகாதிகாரமான உபாயங்களில் உமக்கு அந்வயமில்லையென்றீர்; இருக்கட்டும்; ஸர்வாதிகாரமான அர்ச்சகம், ஸ்தோத்ரம் முதலியவற்றில் எதாவது அந்வயமுண்டோ? என்று கேட்க, ஐயோ! ஒன்றிலும் அந்வயமில்லையே! என்று கையை விரிக்கிறார்.

“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும்ஆம்பலும் முன் சண்டக்கால், புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே” என்றபடி கண்ணிற்கண்ட பூக்களைக் கொணர்த்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்பிக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அது செய்யமாட்டுகிறிலேன்; இவ்வளவு கஷ்டமும் வேணடா; வாயில்வந்த நாலு சொற்களைச் சொல்லி ஸ்தோத்ரமானது செய்யலாமே; அதுவும் செய்யப் பெற்றிலேன்; அவ்வளவு சிரமமும் வேண்டா; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேஹம் வஹிக்கலாமே; அதுவும் பெற்றிலேன்; இப்படி ஒருவிதத்தாலும் எப்பெருமான் விஷயத்திலே தான் கிஞ்சித்கரிக்கப் பெறாதவனானபின்பு அட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் ஒரு வாசியில்லை; என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!! என்கிறார். (உக)

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here