விக்னங்களை விலக்கியருளும் விஷ்வக்ஸேநர்-2

0
1,341 views

Article written by Sri Poigaiadiyan Swami

 

இந்த விஷ்வக்ஸைநர் மஹாவிஷ்ணுவின் ஸேனைத் தலைவராக இருந்து அசுர- சம்ஹாரத்திற்கு உதவுவது மட்டுமின்றி, முன்பே கூறியதுபோல், ப்ரதான மந்திரி போன்று தன் கைப்பிரம்பான “ வேத்ரவதி “ உதவியால் இந்த உலக நிர்வாகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

இதையே ஸ்வாமிதேசிகன் தம்முடைய “யதிராஜ ஸப்ததியில்”

வந்தே வைகுண்ட ஸேநாஞ்யாம் தேவம் ஸூத்ரவதிஸகம் |
யத்வேத்ர ஸிகரஸ்பந்தே விஸ்வமேத த்வய வஸ்திதம் ||

என்று கூறுகிறார்

 

மேலேக் கூறப்பட்ட ஸ்லோகத்தின் பொருள் யாதெனில், மஹா-விஷ்ணுவின் சேனைத்தலைவரும், ஸூத்ரவதீ என்ற பெயரையுடைய மனைவியுடன் இருப்பவரும், எவருடைய வேத்ரவதி என்ற கைப்பிரம்பின் அசைவால் இந்த உலகம் நிலைப்பெற்று நிற்கின்றதோ, அப்படிப்பட்ட விஷ்வக்ஸேநரை நான் வணங்குகின்றேன் “ என்பதாகும். அநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இந்த விஷ்வக்ஸேநரை, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சந்நிகளில்தான் காணமுடியும். அடியேன் அறிந்த வகையில், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் இவர் ஸூத்ரவதியுடன் எழுந்தருளியிருப்பதாகவும், சென்னையை அடுத்த பொன்விளைந்த களத்தூர் என்ற கிராமத்தில் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் மஹாவிஷ்ணுவைப் போன்று அருள்பாலிக்கின்றார்.

ஆனால் சிலர் விஷ்ணு ஆலயங்களில், பிராஹாரத்தில் தும்பிக்கையுடன் காணப்படுபவரையே விஷ்வக்ஸேநர் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். மற்றும் சிலர், அவரை பார்வதி புத்திரன் விநாயகர் என்று கருதி அவருக்கு தோப்புகரணம் போடுவர். அவையெல்லாமே தவறு.

அப்படியென்றால் துதிக்கையுடன் காணப்படும் அவர்தான் யார் ?. அவர்தான் “ கஜாநநன் “ என்று அழைக்கப்படும், விஷ்வக்ஸேநருக்குக் கீழ் பணிபுரியும் அநேகப் படைத் தலைவர்களுள் ஒருவர். ஜயத்ஸேநன், ஹரிவக்த்ரர், காலப்ரக்ருதி போன்ற படைத் தலைவர்களுள் முதன்மையானவர். இவருடைய முக்யவேலை திருக்கோயில்களை பராமரிப்பது, கோயிலுக்கு வந்து போவோர்களைக் கண்காணிப்பது, கோயிலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது போன்றவையாகும். ஆகவே நாம் இவரையும் வணங்க வேண்டும்.

இதனையே பராசர பட்டரும், தம்முடைய ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் “ விஷ்வக் ஸேநரின் சேனைத்தலைவர்களான. கரிமுகன் (கஜாநநன்), ஜயத்ஸேனன், கலாஹலன், சிம்ஹமுகன் முதலிய எந்த வீரர்கள் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை நான்கு திசைகளிலும் காத்துக் கொண்டு வருகின்றனரோ அவர்கள் நமக்குச் சுகத்தையளிக்கட்டும்” என்கிறார்.

விஷ்ணு ஆலயங்களில், சென்று எம்பெருமானை தரிசிக்கும் முன்னர், துவாரபாலகர்களை வணங்கிவிட்டு, பிறகு விஷ்வக்ஸேநரை மனதிற்குள் தியானித்துவிட்டு பிறகே பெருமாள் சந்நிக்குள் நுழைய வேண்டும். அதாவது அவர்கள் அனுமதியின்றி உள்ளேச் சென்று வேண்டிக்கொண்டால், அதற்கு எம்பெருமான் பலனளிக்கமாட்டார். அதுபோன்றே ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் இல்லங்களில் பெருமாள் ஆராதனத்தைத் தொடங்கு முன்னர் விஷ்வக்ஸேநரை துளஸியில் ஆவாகனம் செய்து, வடகிழக்கு திசையையில் திரும்பி நின்று கொண்டு “ஓம் நமோ பகவதே விஷ்வக்ஸேநாய நம:“ என்று அவர் மூலமந்திரத்தை உச்சரித்துவிட்டு, சூத்ரவதி-ஸமேத விஷ்வக்ஸேநரை மானசீகமாக வணங்கிவிட்டு பின்னரே பெருமாள் ஆராதனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வளவு ஏன் ? பெருமாள்கோயில்களில் ப்ரஹ்மோத்ஸவம் ஆரம்பிக்கும் முதல் தினம், “சேனைமுதலியார் உற்சவம்“  என்று இவரை ஆராதித்தப் பின்னரே உற்சவத்தையே நடத்துவர். அன்று இரவு விஷ்வக்ஸேநர் விக்ரகத்தை வீதி புறப்பாடாக, பெருமாள் வலமிருக்க இருக்கும் வீதிகளி-லெல்லாம் ஊர்வலமாக எழுந்தருளச்செய்வர்.  இதன் காரணம் பெருமாள் உலாவர இருக்கும் வீதிகளெல்லாம் நன்றாக இருக்கின்றனவா ? வீதிகள் பழுது ஏதுமின்றி இருக்கிறதா? உற்சவம் விக்னங்கள் ஏதுமின்றி எந்த தடையுமில்லாமல் நடைபெற இருக்க வாய்ப்பு இருக்கின்றதா? என்று நேரில் சென்று கண்காணிப்பதாக ஐதீகம்.

அது சரி ! இவரை ஆச்சார்யர்கள், ஆழ்வார்கள் சந்நிதியில் ஏன் எழுந்த-ருளப் பண்ணுகிறார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி ?    காரணம்,

ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப்படி, நமக்கு முதல் ஆச்சார்யன் ( குரு ) ஸ்ரீமந் நாராயணன், அவர் தாயாருக்கு ( ஸ்ரீதேவிக்கு ) வேதங்களை  உபதேஸிக்க, அவர் விஷ்வக்ஸேநருக்கு உபதேஸித்தாராம்.  ஆக விஷ்வக்ஸேநர் ஆச்சார்ய பரம் பரையில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றார்.

பிறகு அவரே நம்ஆழ்வாராக இவ்வுலகில் அவதரித்து நான்கு வேதங்களையும் சுந்தரத்தமிழில்(திருவாய்மொழியாக), அளித்து இருக்கிறார். இவர்மூலமாகவே வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரை வளர்ந்தது.

இதனையே ஆச்சார்ய தனியனில் “பெரும்பூதூர் வந்த வள்ளல், பெரியநம்பி, ஆளவந்தார், மணக்கால்நம்பி, உய்யக்கொண்டார், நாதமுனிகள், சடகோபன், சேநைநாதன், இன்னமுதத் திருமகளென்று, எம்பெருமான் திருவடி அடைகின்றேனே“ என்று கூறுகிறது.

தொடரும்…..

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here